அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கட்சியில் இருந்து நீக்கம்!

அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்ததை எதிர்த்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் நடவடிக்கை.

AMMK TTVDhinakaran

சென்னை :அமமுக (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) துணைப் பொதுச்செயலாளரும், முக்கிய நிர்வாகியுமான எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.

அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. S.V.S.P. மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணம், அமமுக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்ததை மாணிக்கராஜா கடுமையாக எதிர்த்து வந்தது மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தது ஆகியவை எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மாணிக்கராஜா விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவின் இந்த நீக்க நடவடிக்கை, கட்சியில் ஏற்பட்டுள்ள உள் முரண்பாடுகளை வெளிப்படையாக்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அமமுகவின் உறுதியை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.