நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 பேர் இந்தியா திரும்பினர் – தமிழ்நாடு அரசு அறிக்கை!

நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று இந்தியா திரும்பிவிட்டனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Nepal Protests

சென்னை :நேபாளத்தில் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை மற்றும் போராட்டங்கள் காரணமாக, அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நேபாளம் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 பேர் பத்திரமாக நேற்று திரும்பிவிட்டனர்.

நேபாளத்தில் மேலும் சிக்கி தவிக்கும் தமிழர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை 011-24193300, 9289516712 (வாட்ஸ் அப்) எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24×7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு. தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுதில்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர்.

மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24×7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.