மன அழுத்தத்தில் இளைஞர்கள்... மெலோடி சாப்பிடும் மோடி... - ராகுல் காந்தி விமர்சனம்!

பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் மெலோனியுடன் ‘மெலோடி’ சாப்பிடுவதில் பிஸியாக இருக்கிறார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Hero Image

இத்தாலி : பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையே நடந்த “Melody” சாக்லேட் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேநேரத்தில், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தற்போது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் அரசு பயணமாக இத்தாலி சென்றுள்ளார். ரோம் நகருக்கு சென்றடைந்த அவரை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் வரவேற்றார். “Welcome to Rome, my friend!” என்று சமூக வலைதளமான X-ல் பதிவிட்டு மெலோனி மோடியை வரவேற்றது கவனம் ஈர்த்தது.

இத்தாலி பயணத்தின் போது இரு தலைவர்களும் ஒன்றாக இரவு விருந்தில் பங்கேற்றனர். பின்னர் ரோம் நகரின் வரலாற்றுச் சின்னமான கொலோசியம் பகுதிக்கும் இருவரும் சென்றனர். அந்த சந்திப்பின் போது, மெலோனி பிரதமர் மோடிக்கு “Melody” என்ற சாக்லேட்டை கொடுத்ததாகவும், அதனை மோடி சிரித்தபடி வாசித்ததாகவும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் “Prime Minister Modi brought us a very good toffee” என்று மெலோனி கூற, மோடி “Melody” என்று படித்துக் காட்டுகிறார். இதையடுத்து இருவரும் சிரித்தபடி பேசும் காட்சி இணையத்தில் வைரலானது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டிலேயே “Meloni” மற்றும் “Modi” ஆகிய பெயர்களை இணைத்து “Melodi” என்ற வார்த்தையை ஜார்ஜியா மெலோனி பயன்படுத்தியிருந்தார். அதன் பிறகு இருவரின் நட்பு மற்றும் நெருக்கம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “நாட்டில் இளைஞர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். நீட் தேர்வு விவகாரம் மாணவர்களை பாதித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் மெலோனியுடன் ‘மெலோடி’ சாப்பிடுவதில் பிஸியாக இருக்கிறார். தற்போது நாட்டின் நிலை இதுதான்” என்று விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில், மறுபுறம் பாஜக ஆதரவாளர்கள் பிரதமரின் வெளிநாட்டு உறவுகள் இந்தியாவுக்கு முக்கியமானவை என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.