குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த சுதர்சன் ரெட்டி?

இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Sudharshan Reddy

டெல்லி :இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவால் அறிவிக்கப்பட்டது.

சுதர்சன் ரெட்டி 1946 ஜூலை 8 அன்று பிறந்தவர். 1971-ல் ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த இவர், 1988-1990 காலகட்டத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகவும், 1990-ல் மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார்.

மேலும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கவுஹாத்தி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும், 2007 முதல் 2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். இவர் வரும் ஆகஸ்ட் 21-ல் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். தேர்தல் செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெற உள்ளது, இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

இதனிடையே, டெல்லியில் NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.