தெலங்கானா :மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அம்பர்பேட் அருகே, அக்டோபர் 31 அன்று பயங்கர சாலை விபத்து நிகழ்ந்தது. அரசு பேருந்து (RTC பேருந்து) 70 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்த்திசையில் இருந்து வந்து மோதியது. இந்த மோதலால் பேருந்து கவிழ்ந்து, ஓட்டுநர் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விபத்து நடந்த இடத்தில், டிப்பர் லாரி ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்த்திசையில் வந்து மோதியதால், பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணித்த பலர் உடனடியாக உயிரிழந்தனர், சிலர் காயங்களுடன் போராடினர். உள்ளூர் போலீஸ், தீயணைப்பு படை மற்றும் மருத்துவக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி அளிக்க தெலங்கானா முதல்வர் உத்தரவிட்டார். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி, விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று மோடி தனது இரங்கல் பதிவில் கூறினார்.தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சம்பவத்தை அறிந்து உடனடியாக உத்தரவுகள் பிறப்பித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி, காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அறிவிக்கப்பட்டது.
உள்ளூர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணித்தனர். போக்குவரத்து போலீஸ், விபத்து காரணங்களை விசாரித்து வருகிறது, லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
