சென்னை :செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜனவரி 22) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தே.ஜ.கூட்டணி தலைவர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வருகை தருகிறார்.
சென்னையில் இருந்து சாலை வழியாக மதுராந்தகம் செல்ல உள்ளார். கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ள உள்ளதால், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது! இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி வலுப்பெற்று வரும் நிலையில், இக்கூட்டம் திமுகவுக்கு பெரும் சவாலாக அமையும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
