மகளிருக்கு இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி!

மக்கள் தொகையில் பாதி உள்ள மகளிருக்கு அதிகாரமளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

Hero Image

டெல்லி : மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்.பிரதமர் மோடி பேசுகையில்,“மக்கள் தொகையில் பாதி உள்ள மகளிருக்கு அதிகாரமளிக்க வேண்டும். புதிய வரலாற்றைப் படைக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. தேசத்தின் மிக முக்கியமான தருணம் இது” என்று வலியுறுத்தினார்.

மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பல உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகக் குறிப்பிட்ட பிரதமர், “இன்று காலை முதல் இந்த முக்கிய மசோதா குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. பல உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பியுள்ளனர்.

அந்த விவகாரங்கள் அனைத்துக்கும் விரிவான மற்றும் துல்லியமான தகவல்களை அவைக்கு வழங்குவோம். அதனால் அந்த விவரங்களுக்குள் நான் இப்போது செல்ல விரும்பவில்லை.ஒரு நாட்டின் வாழ்க்கையில் சில முக்கியமான தருணங்கள் வரும். அத்தகைய தருணங்களில் சமூகத்தின் மனநிலையும், தலைமையின் திறனும் அந்தத் தருணத்தைப் பிடித்து, நாட்டுக்கு ஒரு சொத்தாக மாற்றி, வலுவான பாரம்பரியத்தை உருவாக்கும்.

இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் இத்தகைய முக்கிய தருணங்கள் இப்போது உள்ளன” என்றார்.மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:“25-30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த யோசனை முதன்முதலில் உருவானபோது, அதை நாம் செயல்படுத்தியிருக்க வேண்டும். இன்று அதை முதிர்ச்சியான கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளோம். தேவைக்கேற்ப காலத்துக்கு ஏற்றவாறு அதை மேம்படுத்தியும் வருகிறோம். இதுதான் ஜனநாயகத்தின் அழகு.

நாம் ஜனநாயகத்தின் தாய். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் ஒரு வளர்ச்சிப் பயணமாக இருந்து வருகிறது. இந்த அவையில் உள்ள நாம் அனைவரும் இந்த வளர்ச்சிப் பயணத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் தேசத்தின் மிக முக்கியமான தருணத்தில் விவாதிக்கப்படுவதாகவும், இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.இந்த உரை நாடாளுமன்றத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மசோதாக்கள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.