12 வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

ஆப்ரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் எனவும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு தலை வணங்குகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Narendra Modi

டெல்லி :இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, 2025 அன்று டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வரவேற்புடன் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில், இந்திய முப்படைகள் மற்றும் டெல்லி காவல் படை இணைந்து அளித்த அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சி, நாட்டின் ஒற்றுமையையும் வலிமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்தது.விழாவின் முக்கிய அம்சமாக, இந்திய விமானப்படையின் இரண்டு Mi-17 ஹெலிகாப்டர்கள் செங்கோட்டை மீது பறந்து மலர் மழை பொழிந்தன. ஒரு ஹெலிகாப்டர் தேசியக் கொடியை ஏந்தி பறந்தது, மற்றொரு ஹெலிகாப்டர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை குறிக்கும் பதாகையை காட்சிப்படுத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முக்கிய முயற்சியாக, பிரதமர் மோடி இந்த வெற்றியை பெருமிதத்துடன் கொண்டாடினார்.

செங்கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவில், 5,000-க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில், ‘விக்சித் பாரத் 2047’ தொலைநோக்கு திட்டம், பொருளாதார முன்னேற்றம், மற்றும் சமூக நீதி குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.

கொடியேற்றி வைத்துவிட்டு பேசிய பிரதமர் மோடி ” 75 ஆண்டுகளாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கலங்கரை விளக்கம் போல நமக்குப் பாதையைக் காட்டி வருகிறது. இந்த மாபெரும் சுதந்திரத் திருவிழா 140 கோடி தீர்மானங்களின் திருவிழா. இன்று சிறப்புவாய்ந்த நாள் ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அதிர்ச்சியிலும், கோவத்திலும் ஆழ்ந்தது. பல 10 ஆண்டுகளாக நடக்காத ஒன்றை நமது ராணுவம் நடத்திக் காட்டியது. பல 100 கி.மீ. உள்ளே சென்று எதிரிகளை அழித்தோம் இதனை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன்” எனவும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த பேசிய அவர் ” இந்திய சுதந்திரத்தில் பெண்களின் சக்திக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 150ஆவது பிறந்த தினமும்கூட” எனவும் பேசினார்.

இது, இந்தியாவின் எதிர்கால இலக்குகளை வலியுறுத்துவதாக அமைந்தது.விழாவிற்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, மேலும் செங்கோட்டை பகுதி பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. மலர் மழை மற்றும் முப்படைகளின் அணிவகுப்பு, இந்த சுதந்திர தின விழாவிற்கு கூடுதல் பிரம்மாண்டத்தை சேர்த்தது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இந்த தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.