மகாராஷ்டிரா: துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. விமானத்தில் அஜித் பவாருடன் பயணித்தவர்களில் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், உதவியாளர் பிங்கி மாலி, தலைமை விமானி சாஹில் மதன், துணை விமானி ஷம்பவி பதக் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் மொத்தம் 6 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவரங்கள் மகாராஷ்டிரா அரசு மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.விபத்து குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், மும்பையில் இருந்து பாராமதி நோக்கி சென்ற VSR Ventures-ஐ சேர்ந்த Learjet 45 (VT-SSK) விமானம் காலை 8:18 மணிக்கு பாராமதி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறை தரையிறங்க முயன்றபோது ஓடுதளம் சரியாகத் தெரியவில்லை என விமானி தெரிவித்ததால், தரையிறங்காமல் மேலெழும்பிச் சென்றார்.
சிறிது நேரத்தில் இரண்டாவது முறையாக தரையிறங்க முயன்றபோது ஓடுதளம் தெரிவதாக உறுதி அளித்தார்.காலை 8:43 மணிக்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரே நிமிடத்தில், அதாவது 8:44 மணிக்கு விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. தரையிறங்குவதற்குத் தேவையான காற்றோட்டம் மற்றும் வானிலை நிலவரம் (3000 மீட்டர் பார்வைத் திறன்) ஓரளவுக்கு சாதகமாகவே இருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானிகள் முதலில் ஓடுதளம் தெரியவில்லை என்று கூறிய பிறகு தெரிவதாக உறுதி அளித்ததும், உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதும் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துக்கான சரியான காரணத்தை அறிய விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதே VSR Ventures நிறுவனத்தின் மற்றொரு விமானம் (VT-DBL) அக்டோபர் 2023-இல் மும்பையில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கும் இன்னும் விசாரணையில் உள்ள நிலையில், இந்த சம்பவம் நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.இந்த விபத்தில் அஜித் பவாருடன் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு மற்றும் மத்திய அரசு ஆறுதல் தெரிவித்து வருகின்றன.
விபத்து நடந்த உடனேயே அவசர சேவைகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ஆனால் விமானம் முழுமையாக தீப்பற்றி எரிந்ததால் மீட்புப் பணிகள் கடினமாக இருந்தன. விசாரணை முடிவுகள் வெளியாகும் போது முழு உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துயர சம்பவம் மகாராஷ்டிரா அரசியல் மற்றும் விமான போக்குவரத்து துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
