உத்தரப்பிரதேசம் :பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 8, 2025) உத்தரப்பிரதேசம் வாரணாசியில் 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
புதியதாக தொடங்கி வைக்கப்பட்ட 4 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் செல்லும். இது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்தை ஏற்படுத்தும்.
வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், நாடு முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. உயர்தர வசதிகள், வேகம், பாதுகாப்பு ஆகியவை இந்த ரயில்களின் சிறப்பம்சங்கள். பிரதமர் மோடி இந்திய ரயில்வேயை உலகத் தரத்தில் மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்த பிறகு, பனாரஸ்–கஜுராஹோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது போன்ற நிகழ்ச்சிகள் ரயில் சேவையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய ரயில் சேவைகள் பயணிகளுக்கு வசதியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
