வெளிச்சத்துக்கு NEET 2026 வினாத்தாள் கசிவு! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது!

நீட் வினாத்தாள்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தலா ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.

Hero Image

டெல்லி : இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான மிக முக்கியமான தேர்வாக NEET பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வுக்காக பல ஆண்டுகள் தயாராகிறார்கள். ஆனால் 2026ஆம் ஆண்டு நடைபெற்ற NEET UG தேர்வு, தற்போது நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ள மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் சம்பவம், முதலில் ஒரு சாதாரண “Guess Paper” போலத் தோன்றியது. ஆனால் சில மணி நேரங்களிலேயே அது இந்தியாவின் மருத்துவ நுழைவுத் தேர்வு அமைப்பையே கேள்விக்குறியாக்கிய பெரிய விவகாரமாக மாறியது.

கடந்த மே 3ஆம் தேதி NEET UG 2026 தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு முடிந்த பிறகு, ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் நகரில் உள்ள ஒரு பிரபல கோச்சிங் மையத்தில் வழக்கம்போல் மாணவர்கள் திரும்பி வந்தனர்.

சிகார் நகரம், இந்தியாவில் NEET மற்றும் JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய Coaching Hub ஆக பார்க்கப்படுகிறது. அங்குள்ள பல மாணவர்கள் நாடு முழுவதும் Top Rank பெறுவதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு தங்கி படித்து வருகின்றனர்.

அதே பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பிரபல NEET கோச்சிங் மையத்தில் ராஜத் என்ற ஆசிரியர் (மாற்றுப் பெயர்) மூத்த பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு முடிந்த பிறகு, வழக்கம்போல் தேர்வு எழுதி வந்த மாணவர்கள் அனைவரும் கோச்சிங் மையத்துக்கு திரும்பினர்.

அப்போது சில மாணவர்கள், “எக்ஸாம் நல்லா போச்சு”, “இந்த கேள்வி கடினமா இருந்தது”, “Cut-off எவ்வளவு வரும்?” என்று தங்களது தேர்வு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். சிலர் மகிழ்ச்சியாக இருந்தாலும், சில மாணவர்கள் முடிவைப் பற்றி கவலையுடன் காணப்பட்டனர்.

அந்த நேரத்தில், சதீஷ் என்ற மாணவர் (மாற்றுப் பெயர்) மட்டும் மிகவும் பதற்றத்துடன் ராஜத்திடம் தனியாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது முகத்தில் குழப்பமும் பயமும் இருந்ததால், ராஜத்துக்கு உடனே ஏதோ முக்கிய விஷயம் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் சதீஷ், “சார்... எனக்கு ஒரு பெரிய குழப்பமாக இருக்கு. இதை என்ன செய்யணும்னு தெரியல...” என்று பதற்றத்துடன் கூறியபடி தனது மொபைல் போனை ராஜத்திடம் கொடுத்துள்ளார். அந்த மொபைலில் இரண்டு PDF கோப்புகள் இருந்தன. அவை “Guess Paper” என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த கோப்புகளை தனது வீட்டு உரிமையாளர் அனுப்பியதாகவும், அவர் அதை தேர்வுக்கு முன்பே Forward செய்ததாகவும் சதீஷ் தெரிவித்தார்.

முதலில் ராஜத் இதை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டார். ஏனெனில் NEET போன்ற பெரிய தேர்வுகளுக்கு முன்பாக பல Coaching Centre-களும், ஆசிரியர்களும் “Guess Paper”, “Important Questions”, “Most Expected Questions” போன்ற PDF-களை மாணவர்களுக்கு அனுப்புவது வழக்கமான விஷயமாகும்.

வதந்தி என்று நினைத்த ஆசிரியர்

முதலில் ராஜத் இதை ஒரு சாதாரண post-exam rumour என்று நினைத்தார். தேர்வு முடிந்த பிறகு “இந்த கேள்விகள் வந்தது”, “அந்த கேள்விகள் match ஆயிருச்சு” போன்ற வதந்திகள் அடிக்கடி பரவுவது வழக்கம்.ஆனால் சில கேள்விகளை பார்த்தவுடன் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் மாணவர் சதீஷை மற்ற மாணவர்களிடமிருந்து தனியாக தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். ஏனெனில் இது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கக்கூடும் என்று அவர் நினைத்தார். பின்னர் மற்றொரு ஆசிரியரையும் அழைத்து, இருவரும் சேர்ந்து அந்த PDF-களை விரிவாக ஆய்வு செய்ய ஆரம்பித்தனர்.

அதிர்ச்சியான உண்மை

சுமார் மூன்று மணி நேரம் தொடர்ந்து PDF-களையும், மாணவர்கள் நினைவில் வைத்திருந்த உண்மையான கேள்விகளையும் ஒப்பிட்டு பார்த்தனர். இரவு 9 மணிக்குள், அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் PDF-களில் இருந்த மொத்தம் 135 கேள்விகள் உண்மையான NEET தேர்வு வினாத்தாளுடன் பொருந்தியிருந்தன.

அதில்: 45 வேதியியல் (Chemistry) கேள்விகள்மற்றும் 90 உயிரியல் (Biology) கேள்விகள் இருந்ததாக கூறப்படுகிறது. முதல் PDF-யில் சுமார் 60 பக்கங்கள் கொண்ட கையால் எழுதப்பட்ட வேதியியல் கேள்விகள் இருந்தன.

இரண்டாவது PDF-யில் 87 பக்கங்கள் கொண்ட தட்டச்சு செய்யப்பட்ட உயிரியல் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இந்த அளவுக்கு கேள்விகள் match ஆனது சாதாரண விஷயம் இல்லை என்பதை ஆசிரியர்கள் உடனே உணர்ந்தனர்.

இதையடுத்து மாணவர் சதீஷ், தனது வீட்டு உரிமையாளரை உடனடியாக தொடர்பு கொண்டார். அப்போது அவர் கூறிய தகவல் ராஜத்துக்கு இன்னும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “இந்த PDF-களை நான் மே 2ஆம் தேதி இரவு 11 மணியளவில் என் மகனிடமிருந்து பெற்றேன்,” என்று வீட்டு உரிமையாளர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. அவருடைய மகன் கேரளாவில் மருத்துவம் படித்து வருவதாகவும் கூறப்பட்டது. எனவே, இதன் மூலம், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே இந்த கேள்விகள் வெளியே சென்றிருக்கலாம் என்பதுதான்.

புகார் அளிக்க முயற்சி

இந்த விவகாரம் மிகப்பெரிய மோசடியாக இருக்கலாம் என்பதை உணர்ந்த ராஜத், முதலில் சில ஊடகங்களை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் ஊடகங்கள், “முதலில் போலீசில் புகார் அளிக்க வேண்டும்” என்று கூறியதால், மாணவர் சதீஷை உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பினார்.

அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர், விஷயத்தை கேட்ட பிறகு, “மறுநாள் எழுத்து மூலம் புகார் அளிக்க வேண்டும்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்லவில்லை. பின்னர் போலீஸ் தரப்பில், “எழுத்து மூலம் உறுதியான ஆதாரம் கொண்ட புகார் வராததால் FIR பதிவு செய்ய முடியவில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் ராஜத்தைக் மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகு அவர் பழைய NEET Paper Leak மற்றும் AIPMT-2015 போன்ற தேர்வு மோசடி சம்பவங்களை பற்றி படிக்க ஆரம்பித்தார்.

அப்போது அவருக்கு ஒரு முக்கியமான சந்தேகம் வந்தது. “சிகார் நகரத்தில் இருந்து வினாத்தாள் கசிவது சாத்தியமில்லை,” என்று அவர் நினைத்தார். ஏனெனில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் தேர்வு நாளில்தான் வரும். அங்கு இருந்து leak ஆனால் அது தேர்வு தொடங்கிய பிறகுதான் வெளியே வர முடியும்.

ஆனால் இந்த PDF-கள் தேர்வுக்கு முந்தைய இரவே சிகாருக்கு வந்துவிட்டன. அதனால் இது கீழ்மட்டத்தில் நடந்த லீக் அல்ல... அமைப்பின் உள்ளேயே நடந்த லீக் ஆக இருக்கலாம் என்று ராஜத் சந்தேகித்தார்.

ரகசிய மின்னஞ்சல்

இதையடுத்து மே 7ஆம் தேதி, ராஜத் மற்றும் மாணவர் சதீஷ் இணைந்து National Testing Agency (NTA)-க்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தனர். அந்த மின்னஞ்சலை தயாரிக்க ஒரு உள்ளூர் RAS அதிகாரியும் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மின்னஞ்சலில்:

  • PDF ஜெராக்ஸ்
  • PDF கோப்புகள் வந்த நேரத்தின் Screenshot-கள்
  • PDF கேள்விகள் மற்றும் உண்மையான தேர்வு கேள்விகளுக்கான ஒப்பீட்டு ஆதாரங்கள்

என பல முக்கிய தகவல்கள் இணைக்கப்பட்டிருந்தன. “இந்த புகாரால் பலர் எங்களை வெறுக்கலாம். Coaching centre-களும், ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்க்கலாம். ஆனால் திறமையாக படித்த மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற இது அவசியம் என்று நினைத்தோம்,” என்று ராஜத் தெரிவித்துள்ளார்.

NTA உறுப்பினர்கள் கைது

இந்த விவகாரம் பின்னர் CBI-க்கு மாற்றப்பட்டது. பிறகு, விசாரணையில், NTA-வின் Question Paper Setting Committee-யில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அதன்படி புனேவைச் சேர்ந்த உயிரியல் ஆசிரியர் மனிஷா குருநாத் மாண்ட்கரே மற்றும் லட்டூரைச் சேர்ந்த பி.வி. குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிபிஐ தகவலின்படிமனிஷாவுக்கு Botany மற்றும் Zoology பிரிவுகளுக்கான அணுகல் இருந்தது எனவும், குல்கர்னிக்கு Chemistry பிரிவுக்கான அணுகல் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், புனேவைச் சேர்ந்த அழகு நிலைய உரிமையாளர் மனிஷா வாஹ்மாரே இந்த கசிவு வலையமைப்பின் முக்கிய இணைப்பாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்

  • மனிஷா குருநாத் மாண்ட்கரே
  • பி.வி. குல்கர்னி
  • மனிஷா வாஹ்மாரே
  • தனஞ்சய் லோகண்டா
  • சுபம் கைர்னர்
  • மங்கிலால் பிவால்
  • விகாஸ் பிவால்
  • தினேஷ் பிவால்
  • யாஷ் யாதவ்

இதில் மங்கிலால் பிவால், விகாஸ் பிவால், தினேஷ் பிவால் இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள், நீட் வினாத்தாள்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தலா ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்து இருக்கிறது.

இந்த நீட் லீக் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் NEET தேர்வை எழுதிய நிலையில், “முன்கூட்டியே கேள்வித்தாள் வெளியானால் நேர்மையாக படித்த மாணவர்களுக்கு இது பெரிய அநீதி” என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாணவர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.