மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விமானம் விபத்தில் உயிரிழப்பு!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் சென்ற சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Ajit Pawar

மகாராஷ்டிரா :அரசியல் உலகை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக தனி விமானம் இன்று காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பயங்கர விபத்துக்குள்ளானது. மும்பையில் இருந்து பாராமதிக்கு புறப்பட்ட விமானம் தரையிறங்க முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதி வெடித்து தீப்பற்றி எரிந்தது.

இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த உடனேயே பாராமதி விமான நிலையப் பகுதியில் பெரும் புகை மண்டலம் கிளம்பியது. தகவல் அறிந்து உடனடியாக மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமானத்தில் அஜித் பவாருடன் மேலும் 5 பேர் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், அனைவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

அஜித் பவார் பாராமதியில் நடைபெறவிருந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்கவே இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த துயர சம்பவம் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார் NCP கட்சியின் முக்கிய தூணாகவும், ஷரத் பவார் அணியில் இருந்து பிரிந்து தனி அணியை நடத்தி வரும் வலுவான தலைவராகவும் விளங்கியவர். அவரது திடீர் மறைவு மாநில அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு அல்லது வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. சம்பவ இடத்தில் இருந்து வெளியான வீடியோக்களில் விமானம் தீப்பற்றி எரிவதும், புகை மண்டலம் சூழ்ந்திருப்பதும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீட்புப் பணிகள் முடிந்த பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா அரசியலுக்கு பெரும் இழப்பு என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அவரது தலைமையில் NCP (அஜித் பவார் அணி) NDA கூட்டணியில் இணைந்து ஆட்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல்களும் ஆறுதல்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. விபத்து விவரங்கள் மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது