ஹார்முஸ் :நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியதாக சில ஊடகங்களில் வெளியான தகவலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல் தவறானது என்றும், எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சருடன் இது தொடர்பாக பேசியிருந்தாலும், தற்போது வரை எந்த உறுதியான ஒப்பந்தமோ அல்லது சிறப்பு அனுமதியோ வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் தரப்பிலும் ஏற்கனவே இந்திய கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி என்ற தகவலை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் இந்த மறுப்பை உறுதிப்படுத்தியுள்ளன. ஹார்முஸ் நீரிணை முடக்கம் தொடரும் நிலையில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலிருந்து வரும் 85-90% எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் இந்த பாதை வழியாகவே வருவதால், தட்டுப்பாடு நீடித்து வருகிறது.
இதனால் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. உணவகங்கள், ஹோட்டல்கள், சிறு தொழில்கள், திருமண மண்டபங்கள் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் சில இடங்களில் குறைபாடு தொடங்கியுள்ளது. எரிபொருள் விலை உயர்வும் தொடர்கிறது.
இந்தியா தற்போது மாற்று இறக்குமதி பாதைகளை ஆராய்ந்து வருகிறது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா வழியாக எண்ணெய் இறக்குமதி அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஹார்முஸ் வழி மிகக் குறுகிய பாதையாக இருப்பதால், மாற்று வழிகள் செலவு அதிகமாகவும் காலதாமதமாகவும் இருக்கின்றன.
இந்த மறுப்பு தகவல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் எல்பிஜி தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. போர் நிலைமை மாறாத வரை இந்த பிரச்சினை தீர்வு பெறுவது கடினமாக இருக்கும் என்று அரசியல் மற்றும் பொருளாதார நோக்கர்கள் கருதுகின்றனர். மக்கள் அமைதியாக இருந்து, தேவைக்கு மட்டும் எரிபொருள் வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
