டெல்லி :அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியப் பிரஜை பிரேமா வாங்ஜோம் தோங்டாக் (Prema Wangzom Thongdok) நவம்பர் 21 அன்று சீனாவின் ஷாங்காய் புதோங் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த அவரிடம், “நீங்கள் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால் உங்கள் பாஸ்போர்ட் இங்கு செல்லாது; அருணாச்சலம் சீனாவின் பகுதி” என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர். அருணாச்சல பிரதேசத்தை சீனா “தெற்கு திபெத்” என்று அழைத்து 2006 முதல் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருவதால், அருணாச்சல மக்களுக்கு சீனா தனியாக “ஸ்டேபிள்ட் விசா” (காகித விசா) மட்டுமே வழங்குகிறது; சாதாரண பாஸ்போர்ட்டில் நுழைவதை ஏற்பதில்லை. இதனால் பிரேமா அவரது பாஸ்போர்ட்டில் ஸ்டேம்ப் அடிக்க மறுக்கப்பட்டு, அடுத்த விமானத்தில் திரும்ப அனுப்பப்பட்டார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதும், இந்தியா உடனடியாக கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி. இது மாற்ற முடியாத உண்மை. சீனாவின் இந்தச் செயல் சர்வதேச விமானப் பயண விதிமுறைகளையும், சீனாவே அறிவித்த 24 மணி நேர விசா இல்லா டிரான்ஸிட் வசதியையும் மீறியது” என்று தெரிவித்தார்.
இந்தியா சீன தூதரகத்திடம் உத்தியோகபூர்வ ஆட்சேபனை தெரிவித்து, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் மட்டுமே சுருக்கமான பதிலளித்தார்: “அந்தப் பெண் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்.” சீனா தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தை “சாங்னான்” (Zangnan – தெற்கு திபெத்) என்று அழைத்து, அதன் குடிமக்களுக்கு சாதாரண பாஸ்போர்ட்டில் நுழைய அனுமதி மறுக்கிறது. இதற்கு முன்பும் 2023-ல் இரு அருணாச்சல விளையாட்டு வீரர்களுக்கு ஸ்டேபிள்ட் விசா மட்டுமே வழங்கப்பட்டு சர்ச்சை ஏற்பட்டது.
இந்தியா அதை முற்றிலும் நிராகரித்து, அருணாச்சல மக்களுக்கு e-விசா வழங்கும்படி சீனாவை வலியுறுத்தியது.இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. 2020 கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் 21 சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை நடத்தியும், எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து தனது நிலப்படத்தில் காட்டி, புதிய பெயர்கள் சூட்டி வருவதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. இந்தியா “அருணாச்சலம் எப்போதும் இந்தியாவாகவே இருக்கும்; சீனாவின் கற்பனை உரிமை கொண்டாட்டம் அதை மாற்றாது” என்று திரும்பத் திரும்ப தெரிவித்து வருகிறது.இந்தத் தடுப்பு சம்பவம் சாதாரண பயணியை பாதித்திருப்பதால், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பெமா காண்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண்ணை சீன குடியேற்ற அதிகாரிகள் நடத்திய விதம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை அவமானப்படுத்தியதும், இன ரீதியாக கேலி செய்வததும் மிகவும் கொடூரமானது. அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
