டெல்லி :மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 23 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் நிராகரித்து அவர்களை முழுமையாக விடுவித்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்த ஆதாரமும் இல்லை என்றும், பெரிய சதி அல்லது குற்றவியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும் நீதிபதி ஜிதேந்திர சிங் தெளிவாக தீர்ப்பளித்தார்.
நீதிமன்றம் சிபிஐ விசாரணையை கடுமையாக விமர்சித்தது. “சில சமயங்களில் கோப்புகளை அதிகம் படிக்கும்போது அவை உங்களுடன் பேசத் தொடங்குகின்றன” என்று கூறி, வழக்கு ஆரம்பம் முதலே ஆதாரங்கள் இல்லாமல் நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டியது. வாக்குமூலம் கோரியும் சரியாக வழங்கப்படவில்லை, நட்சத்திர சாட்சிகளின் பட்டியல் தரப்படவில்லை, ஒப்புதல் வாக்குமூலங்களின் நகல் கூட கொடுக்கப்படவில்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
சிபிஐ வழக்கறிஞரிடம் நேர்மையை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே நீதிமன்ற அறையிலேயே கெஜ்ரிவாலும் சிசோடியாவும் தங்கள் வழக்கறிஞர் ஹரிஹரனை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பிறகு மீடியாவிடம் பேசிய கெஜ்ரிவால் உணர்ச்சி வசப்பட்டு அழுதார். அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. “நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது. உண்மை வென்றது” என்று கூறினார்.
“நான் ஊழல்வாதி அல்ல. நீதிமன்றம் கெஜ்ரிவாலும் சிசோடியாவும் நேர்மையானவர்கள் என்று கூறியுள்ளது” என்று பேசினார்.இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அரசியல் வெற்றியாக அமைந்துள்ளது. கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முழுமையாக முடிவுக்கு வந்ததால் அவரது அரசியல் பிம்பம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிசோடியாவும் இதேபோல் பெரும் நிவாரணம் அடைந்துள்ளார். டெல்லி அரசியலில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவாக பார்க்கப்படுகிறது.
