பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் உயர்த்திய ஸ்விகி! எவ்வளவு தெரியுமா?

ஸ்விகி உணவு டெலிவரி நிறுவனம் தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் ரூ.2 உயர்த்தியுள்ளது.

Swiggy fee

டெல்லி :ஆன்லைன் டெலிவரி செயலிகளில் உணவின் விலை அதிகமாக இருப்பதாக பலர் புலம்புகின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் உணவு விநியோக பயன்பாடான ஸ்விக்கி தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த முறை கட்டணம் ரூ.12-லிருந்து ரூ.14-ஆக உயர்த்தப்பட்டுள்ளது, அதாவது ரூ.2 அதிகரிப்பு.

இந்த உயர்வு பண்டிகைக் காலத்தில் அதிகரித்த வாடிக்கையாளர் ஆர்டர்களைக் காரணமாகக் கூறி அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த  2023 முதல் உணவு டெலிவரிக்கு ஸ்விக்கி கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. அதன்படி, 2023 ஏப்ரலில் ரூ.2 ஆக இருந்த இக்கட்டணம், 2024 அக்டோபரில் ரூ.10 ஆகவும், தற்போது ரூ.14-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பிளாட்ஃபார்ம் கட்டணம் 600% அதிகரித்துள்ளது.

பண்டிகை காலங்களில் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்ட கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. டெலிவரி பார்ட்னர்களின் ஊதியம், எரிபொருள் செலவு, மற்றும் தள பராமரிப்பு செலவுகள் உயர்ந்திருக்கலாம்.

சேவையின் தரத்தை மேம்படுத்தவும், தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு முதலீடு செய்யவும் கட்டண உயர்வு உதவுகிறது. பொருளாதார பணவீக்கம் மற்றும் போட்டியாளர்களின் கட்டண அமைப்புக்கு ஏற்ப ஸ்விக்கி கட்டணத்தை சரிசெய்கிறது. இந்த உயர்வு பயனர்களுக்கு குறைந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சேவை தரத்தை பராமரிக்கவும் மேம்படுத்தவும் இது உதவும் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது.