டெல்லி கார் குண்டு வெடிப்பு : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி...விசாரணைக்கு குழுவை அமைத்த NIA!

டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

Delhi CarBlast CCTV

டெல்லி :செங்கோட்டை அருகே நவம்பர் 10-ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரில் மேலும் ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் உள்ள மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் தஜமுல் இஸ்லாம் இன்று காலை என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 6 மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தஜமுல் 7-வது மருத்துவராக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் மருத்துவர்கள் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது.தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தது, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது. கைது செய்யப்பட்ட டாக்டர் தஜமுல் உமர் நபி உள்ளிட்ட சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா என்றும் ஆராயப்படுகிறது.

சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. கார் மெதுவாக இயங்கிய நிலையில் திடீரென பயங்கர வெடிப்பு நடப்பது காட்சியில் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வெடிப்புக்கு டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது உறுதியான நிலையில், ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 கிலோ வெடிபொருட்களுடன் தொடர்பு உள்ளதா என்றும் விசாரிக்கப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட டாக்டர் தஜமுல் உள்ளிட்டோர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. என்ஐஏ குழு காஷ்மீர், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறது. மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா “எந்தக் கோணத்திலும் விசாரணை நடக்கும்” என்று உறுதி அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தலைநகர் பாதுகாப்பு குறித்து பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. செங்கோட்டை, பாராளுமன்றம் அருகே நடந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய புலனாய்வு முகமை டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை விசாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.