பார்கி அணை படகு விபத்து: 9 பேர் பலி – மாநில அரசு தகவல்!

பார்கி அணையில் நடந்த படகு விபத்தில் இதுவரை 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Hero Image

மத்தியப் பிரதேசம் : ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் (நர்மதா ஆற்றில்) நேற்று (ஏப்ரல் 29) ஏற்பட்ட சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்னும் பலர் மாயமாகியுள்ளனர்.இறந்தவர்களில் ஒரு தாயும் அவரது 4 வயது மகனும் அடங்குவர். அவர்களது உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டபோது, மீட்புப் பணியாளர்களே அதிர்ச்சியடைந்தனர்.

தாய் தன் குழந்தையை இறுக்கமாக அணைத்தபடி, அவனைக் காப்பாற்ற முயற்சித்த நிலையில் இருவரும் இறந்திருந்தனர். இவர்கள் டெல்லியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட சுற்றுலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தின் தந்தையும் மகளும் உயிர் பிழைத்தனர்.மாநில அமைச்சர் ராகேஷ் சிங், “என்ழிஆர்எஃப் (NDRF) இரண்டு உடல்களை மேலும் மீட்டுள்ளது. மீட்புப் பணி முடிவடைந்த பிறகு, ஏன் பலர் உயிர் பிழைக்கவில்லை என்பது தெளிவாகும். அவர்கள் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தும் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பது விசாரணையில் தெரியவரும்” என்று ANI-க்கு தெரிவித்தார்.

இதுவரை 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் (5 குழந்தைகள் உட்பட) இன்னும் மாயமாகியுள்ளனர்.படகில் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டதா என்பது குறித்து முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் ராகேஷ் சிங், பயணிகள் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததாகக் கூறிய நிலையில், ஒரு உயிர் பிழைத்தவர் “படகில் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லை. லைஃப் ஜாக்கெட் கூட வழங்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், படகின் கேப்டன் மகேஷ் படேல் மட்டும் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தார்.மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், இந்த விபத்துக்கு “கடுமையான புயல்” காரணம் என்று தெரிவித்தார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “விரைவான மீட்புப் பணிகள் மூலம் 15 பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை விரைவில் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு முழு ஆதரவுடன் உள்ளது” என்று கூறினார்.கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, பலமான காற்று மற்றும் எச்சரிக்கைகளை படகு இயக்குநர் பொருட்படுத்தாதது விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஒரு கண்காணிப்பாளர் சம்ராட் கூறுகையில், “மிகவும் பலமான காற்று வீசியது. படகு இயக்குநரிடம் மறுபுறம் செல்லுமாறு கூறினோம். அவர் கேட்கவில்லை. படகு நடுவில் செல்லும்போது கவிழ்ந்தது. சிலர் லைஃப் ஜாக்கெட்டுடன் குதித்தனர். நாங்கள் 15-16 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினோம்” என்றார்.இந்த விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.