மகாராஷ்டிரா :துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் அணி) தலைவருமான அஜித் பவார் (66) இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து பாராமதிக்கு புறப்பட்ட சிறிய ரக சார்ட்டர் விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து மோதி தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் அஜித் பவாருடன் பயணித்த மேலும் ஐந்து பேர் – நான்கு பயணிகள் மற்றும் இரு பைலட்டுகள் – அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமானம் காலை 8 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு 9.12 மணியளவில் விபத்துக்குள்ளானது. டெல்லியை தளமாகக் கொண்ட VSR சார்ட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான Learjet 45 ரக விமானம் (8 இருக்கைகள் கொண்டது) தரையிறங்கும் போது ரன்வேயில் சிக்கலை சந்தித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராமதி ஓடுதளம் மிகச் சிறியது என்பதால் தொழில்நுட்பக் கோளாறு அல்லது தரையிறங்கும் சிக்கல் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அஜித் பவார் பாராமதியில் நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவே இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார். விபத்து நிகழ்ந்த உடனே மீட்புக் குழுக்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமானம் முழுமையாக எரிந்து நொறுங்கியதால் மீட்புப் பணிகள் கடினமாக இருந்தன. உயிரிழந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷரத் பவார் அணியில் இருந்து பிரிந்து தனி அணியை நடத்தி NDA கூட்டணியுடன் இணைந்து ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் அவர். பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஷரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.விபத்துக்கான முழு காரணங்களை அறிய DGCA உள்ளிட்ட மத்திய அமைப்புகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சோக சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
