பேரறிவாளனின் பரோல் நிராகரிப்பட்டது தொடர்பாக சிறைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது 7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரி, அவரது அம்மா அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்தவழக்கில் சிறைத்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.அந்த பதிலில், பேரறிவாளன் ஏற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் வருகின்ற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.மேலும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.