‘இந்தியன் 3 வேலை ஆரம்பிக்கப்போறோம்’…இயக்குநர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!
இந்தியன் 3 பணிகள் தொடங்கினால் அடுத்த 6 மாதங்களில் திரைக்கு கொண்டு வந்துவிடலாம் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியன் 2 கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த தோல்வி அடைந்தது. அது மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் கூட சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவர் கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தினை இயக்கினார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்துள்ளது. 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இன்னும் பட்ஜெட் தொகையை வசூல் செய்யமுடியாமல் படம் திணறி வருகிறது.
இந்நிலையில், தொடர்ச்சியாக இரண்டு தோல்வி படங்களை கொடுத்த காரணத்தால் பழையபடி ஹிட் படத்தை கொடுத்து விமர்சகர் வாயை அடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஷங்கர் தன்னுடைய அடுத்தப்படமான இந்தியன் 3-ஐ கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷங்கர் இந்தியன் 3 குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” அடுத்ததாக இந்தியன் 3 படத்தின் வேலைகளை தொடங்க தான் திட்டமிட்டு இருக்கிறேன். இப்போது படத்தின் வேலைகளை தொடங்கினாள் இன்னும் 6 மாதங்களில் இந்தியன் 3 படத்தினை கொண்டு வந்துவிடலாம். ஏனென்றால், படத்தில் VFX வேலைகள் நிறையவே இருக்கிறது. எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நாள் VFX செய்வதற்கு நேரமாகும் என்பதை கேட்டுவிட்டு அதற்கான வேலைகளை தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன்” எனவும் ஷங்கர் தெரிவித்தார்.
மேலும், இரண்டாவது பாகம் வெளியானபோதே கடும் விமர்சனத்தை படம் சந்தித்த காரணத்தால் மூன்றாவது பாகம் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல்கள்கசிந்து இருந்தது. என்ன விமர்சனங்கள் வந்தாலும் கண்டிப்பாக மூன்றாவது படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதை ஷங்கரும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த சூழலில், ஷங்கர் படத்தின் வேலைகளை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.