சென்னை :பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி ‘கிங்டம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் அது முற்றிலும் நிற்கும் வகையில் சர்ச்சை ஏற்பட்டது. ஏனென்றால், ஈழத்தமிழர்களை இழிவாக சித்தரிக்கும் வகையில் படம் இருப்பதாக புகார்கள் எழுந்தது.
பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இதற்க்கு கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள். கிங்டம் திரைப்படத்தினை திரையிடக்கூடாது மீறினால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றையும் வெளியிட்ட காரணத்தால் இது பேசுபொருளாக வெடித்தது.
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா திரையரங்கில் ‘கிங்டம்’ படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரத்தில் ஜெகன் திரையரங்கில் படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டு, திரையிடலை நிறுத்தக் கோரி போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இது குறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அறிக்கையில் கூறியதாவது ” எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் “கிங்டம். இப்படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கேள்விப் பட்டோம்.தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.
இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில் disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். கிங்டம்’ திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனவும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
