சென்னை :நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் படத்தின் வெளியீடு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.தனி நீதிபதி உத்தரவில் மனுவில் கோரப்படாத நிவாரணம் அளிக்கப்பட்டதாகவும், பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது ஏன் என்றும், நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்தது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த வாதங்களை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.தயாரிப்பு நிறுவனம் (கே.வி.என். புரொடக்ஷன்ஸ்) தரப்பில் இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவை மீட்டெடுக்க உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று படக்குழு கோரியுள்ளது.
இந்த வழக்கு திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தற்போது முழுமையாக தாமதமாகியுள்ளது. தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு முடிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, தலைமை நீதிபதி அமர்வின் இடைக்காலத் தடை புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
