மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன்! சென்சார் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஜனநாயகன் வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Judgment postponed in Janyayan case

சென்னை :நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 20) தீவிர விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸா தலைமையிலான அமர்வு முன்பு காலை 11:30 மணியளவில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன் மற்றும் பிரதீப் ராய் ஆஜராகினர்.

சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். உணவு இடைவேளைக்காக சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட விசாரணை மீண்டும் தொடங்கியது. இருதரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.சென்சார் போர்டு தரப்பில், படத்திற்கு எதிராக புகார் வந்ததால் மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதாகவும், மறுஆய்வு குழு விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் அமைக்கப்படும் என்றும் வாதிடப்பட்டது.

படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தால் இவ்வழக்கு தேவையில்லாமல் போயிருக்கும் என்றும், குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.படத் தயாரிப்பு தரப்பில், படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

வாரியத் தலைவரின் உத்தரவு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டது.நீதிபதிகள், படத்திற்கு எதிராக புகார் யாரிடம் கிடைத்தது என்று கேட்டபோது, மும்பையில் உள்ள சென்சார் போர்டு தலைவரிடம் புகார் கிடைத்ததாகவும், சான்றிதழ் கொடுக்கும் வரை புகார் கொடுத்தவரின் பெயரை தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்கக் கூடாது என்றும் சென்சார் போர்டு தரப்பு பதிலளித்தது.

சென்சார் போர்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விரிவான உத்தரவு எங்கே? உத்தரவு இல்லாமல் எப்படி வழக்கு தொடர முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு தொடர்பான இறுதி முடிவு இந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும். ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இத்தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தின் வெளியீடு தொடர்பான குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.