“நீங்க பேச வேண்டாம்?”… சீதையாக நடித்த சாய்பல்லவிக்கு இப்படியொரு அதிர்ச்சியா?

ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் டப்பிங் பேச வாய்ப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hero Image

டெல்லி : இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்றாக “ராமாயணம்” பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் சீதையாக நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். படம் உலகளவில் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது சாய்பல்லவியின் டப்பிங் குறித்து பாலிவுட்டில் புதிய தகவல்கள் பரவி வருகின்றன.

பொதுவாக மற்ற மொழிகளில் நடிக்கும் பல நடிகைகள், தங்களது கதாபாத்திரங்களுக்கு சொந்த குரலில் டப்பிங் பேசாமல், அந்த மொழியைச் சேர்ந்த டப்பிங் கலைஞர்களையே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சாய்பல்லவி ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முடிந்தவரை சொந்த குரலில் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் என்று கூறப்படுகிறது.

அதேபோல், “ராமாயணம்” படத்திலும் சீதை கதாபாத்திரத்திற்கு தானே ஹிந்தியில் டப்பிங் பேச வேண்டும் என்ற விருப்பத்தை சாய்பல்லவி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு அதற்கு முழுமையாக சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக சமீபத்தில் வெளியான “ஏக் தீன்” திரைப்படம் பார்க்கப்படுகிறது. அமீர் கானின் மகன் ஜுனைத் நடித்த அந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் சாய்பல்லவி தனது சொந்த குரலிலேயே ஹிந்தி டப்பிங் பேசியிருந்தார்.

ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. குறிப்பாக, சமூக வலைதளங்கள் மற்றும் சில பாலிவுட் மீடியா வட்டாரங்களில் சாய்பல்லவியின் ஹிந்தி உச்சரிப்பு மற்றும் குரல் மாடுலேஷன் குறித்து விமர்சனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

வடஇந்தியர்கள் பேசும் இயல்பான ஹிந்தி உச்சரிப்புக்கும், தென்னிந்தியர்கள் பேசும் ஹிந்திக்கும் வித்தியாசம் இருப்பதால், அது திரையில் சில இடங்களில் சரியாக work out ஆகவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால், “ராமாயணம்” படத்தில் சாய்பல்லவியின் சீதை கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவர் டப்பிங் பேச வாய்ப்பு இருப்பதாக தற்போது பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அதேநேரத்தில், இந்த விஷயம் சாய்பல்லவிக்கு ஒரு புதிய சவாலாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் தானே முழுமையாக ஹிந்தியில் டப்பிங் பேசும் அளவுக்கு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதியை இது அவருக்குள் உருவாக்கியிருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஒருவேளை “ராமாயணம்” படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கும் நேரத்திற்குள் சாய்பல்லவி தனது ஹிந்தி உச்சரிப்பை மேலும் மேம்படுத்தினால், மீண்டும் அவரையே டப்பிங் பேச பரிசீலிக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த தகவல் பாலிவுட் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.