சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைக்கு முலாம் பூசுவதற்காக கொடுக்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த வழக்கில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் விசாரணை நடத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜெயராமின் வீட்டுக்கு தங்கத் தகடுகளுடன் சென்று பூஜை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயராம் தனது வாக்குமூலத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு சென்று வருவதால் உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரது வருகைக்கு பூஜை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தங்கத் தகடுகள் அவரது வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் SIT-யால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் தங்கம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது ஜெயராமின் வீட்டில் பூஜை நடந்தது உறுதியாகியுள்ளது. உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் ஜெயராமுக்கு என்ன தொடர்பு, பூஜைக்குப் பிறகு தங்கம் எங்கு சென்றது, முறைகேடு நடந்ததில் ஜெயராமுக்கு தெரியுமா என்பது குறித்து ஆழமான விசாரணை நடைபெற்று வருகிறது. SIT அதிகாரிகள் ஜெயராமிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் திரையுலகத்திலும், பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை கோயிலுடன் தொடர்புடைய புனிதப் பொருளான தங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு, ஜெயராமை போன்ற பிரபலங்களை நேரடியாக தொடர்புபடுத்தியுள்ளதால் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. SIT அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
