சல்மான் கானைக் கொலை செய்ய முயன்ற அன்மோல் பிஷ்னோய்! அதிரடியாக கைது செய்த NIA!

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட, கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதர் அன்மோல் பிஷ்னோவை NIA கைது செய்தது.

Anmol Bishnoi salman khan

டெல்லி :அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்துள்ளது. நவம்பர் 18, 2025 அன்று அமெரிக்காவின் ஹோம்லேண்ட் டிபார்ட்மெண்ட் அன்மோலை நாடு கடத்தியது. அவர் டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது பல்வேறு பெரும் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த அன்மோல் பிஷ்னோயின் கைது என்பதால், இந்திய சட்ட செய்திகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அன்மோல் பிஷ்னோய், லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரராக, பிஷ்னோய் கேங்ஸ்டர் கூட்டத்தின் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். அவர் 2024 ஏப்ரல் மாதம் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பை பாங்ட்ரா வீட்டில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்றவர். இது சல்மான் கானைக் கொலை செய்யும் சதி என கருதப்படுகிறது. மேலும், 2024 அக்டோபர் மாதம் NCP தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கு, 2022 மே மாதம் பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா கொலை வழக்குகளில் அவர் முதல் குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார்.

NIA அவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது.அமெரிக்காவில் அன்மோல் பிஷ்னோய், 2024 நவம்பரில் கலிஃபோர்னியாவில் போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அகதி அந்தஸ்து கோரியும், ரஷ்ய பாஸ்போர்ட் பயன்படுத்தியும் தப்பிக்க முயன்றார். இந்தியாவின் கோரிக்கையின் பேரில் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டிஸ் வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவுடன் ஒத்துழைத்து அவரை நாடு கடத்தினர். அன்மோல் இந்தியாவில் 18-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதில் ஆயுதங்கள், போதைப்பொருட்கள், பண மோசடி உள்ளிட்டவை அடங்கும்.இந்த கைது, பிஷ்னோய் கேங்ஸ்டர் கூட்டத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அன்மோல் அவரது செயல்பாடுகளை வழிநடத்தியதாக போலீஸ் கூறுகிறது. NIA, மும்பை போலீஸ், பஞ்சாப் போலீஸ் ஆகியவை அவரை விரைவாக விசாரணை செய்ய தயாராக உள்ளன. சல்மான் கான் வழக்கில் MCOCA சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம், இந்தியாவின் சர்வதேச குற்றப் போராட்டத்தில் வெற்றியாக மாறியுள்ளது.