ஒரே முறை சார்ஜ் செய்தால் 647 கி.மீ போகலாம்! ஸ்கோடாவின் புதிய 7-சீட்டர் எலக்ட்ரிக் SUV 'PEAQ'!

ஸ்கோடாவின் தனித்துவமான ஸ்டைலிங் மற்றும் நவீன கால தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

Hero Image

செக் நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஸோகோடா, தனது 'Born EV' எலக்ட்ரிக் கார் வரிசையின் புதிய மாடலான 'ஸ்கோடா பீக் இவி' (Skoda Peaq EV) என்ற 7 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி காரைச் சர்வதேசச் சந்தையில் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சந்தையில் இருக்கும் புகழ்பெற்ற ஸ்கோடா கொடியாக் காரை விடப் பெரிய அளவிலும், எதிர்காலத்தின் மிக முக்கிய உலகளாவிய சந்தையாகக் கருதப்படும் இந்தியாவிற்கு வரவிருக்கக்கூடிய தகுதியோடும் இந்த அதிநவீன எலக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தில் பளபளப்பான பிளாக் நிற வெர்டிகல் எல்இடி ஸ்லேட்டுகள், 'T' வடிவ மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், காற்று உட்புகும் வசதியுடன் கூடிய பாடி கலர் பம்பர் மற்றும் 19 முதல் 21 இன்ச் வரையிலான ஏரோ அலாய் வீல்களுடன் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கும் இக்கார், 4.9 மீட்டர் நீளமும், 2,965 மிமீ வீல்பேஸும் கொண்டு பயணிகளுக்குச் சிறந்த இடவசதியை வழங்குகிறது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் காரின் இன்ஜின், மைலேஜ், பேட்டரி ஆப்ஷன்கள் மற்றும் சொகுசு வசதிகள் குறித்த விரிவான விபரங்கள் பற்றி பார்ப்போம்

மூன்று விதமான இன்ஜின்

இந்த எலக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 63 kWh மற்றும் 91 kWh என இரண்டு விதமான பேட்டரி திறன்களிலும், சிங்கிள் மோட்டார் ரியர்-வீல் டிரைவ் மற்றும் டூயல் மோட்டார் ஆல்-வீல் டிரைவ் (AWD) உள்ளிட்ட மூன்று விதமான இன்ஜின் தேர்வுகளிலும் ஆஃபர் செய்யப்படுகிறது.

இதன் ஆரம்ப மாடலான 'பீக் 60' வேரியண்ட் 63 kWh பேட்டரியுடன் 204 hp பவரை வெளிப்படுத்துகிறது. இதன் நடுத்தர மாடலான 'பீக் 90' வேரியண்ட் 91 kWh பேட்டரியுடன் 286 hp பவரையும், இதன் டாப் எண்ட் மாடலான 'பீக் 90x' வேரியண்ட் டூயல் மோட்டார் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் அதிகபட்சமாக 299 hp பவரையும் அசாத்தியமாக உருவாக்கக்கூடிய திறன் கொண்டவையாகும்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 647 கி.மீ மைலேஜ்

ஸ்கோடா பீக் இவி காரின் மிக முக்கிய சிறப்பம்சமாக அதன் அசாத்திய மைலேஜ் மற்றும் சார்ஜிங் வேகம் பார்க்கப்படுகிறது. இதில் இருக்கும் 91 kWh சிங்கிள் மோட்டார் கொண்ட மிட் வேரியண்ட் மாடலானது, ஒருமுறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 647 கிலோமீட்டர் வரை பயணிக்கும் அசாத்திய மைலேஜ் (Range) திறனைக் கொண்டுள்ளது.

அதேபோல இதன் ஆரம்ப வேரியண்ட் 459 கி.மீ ரேஞ்சும், டாப் எண்ட் ஆல்-வீல் டிரைவ் மாடல் 613 கி.மீ ரேஞ்சும் வழங்குகின்றன. மேலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள 199 kW DC அதிவேக பாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் காரின் பெரிய பேட்டரியை வெறும் 28 நிமிடங்களில் 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை மிக விரைவாகச் சார்ஜ் செய்துவிட முடியும்.

சொகுசு அறை போன்ற அமைப்பு

காரின் உள்பகுதி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஒரு பிரீமியம் லவுஞ்ச் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டில் 13.6 இன்ச் அளவிலான பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இதுதவிர 16 ஸ்பீக்கர்களைக் கொண்ட பிரீமியம் சோனோஸ் ஆடியோ சிஸ்டம், இருவழி சார்ஜிங் (V2L) வசதி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஸ்மார்ட்போன் மூலமே காரை இயக்கும் 'டிஜிட்டல் கீ' வசதிகளும் உள்ளன. கூடுதல் சொகுசுக்காகப் பவர்டு லெக் ரெஸ்ட், மசாஜ் சீட்டுகள் மற்றும் மடிக்கக்கூடிய மினி டேபிள்கள் போன்ற பிரீமியம் வசதிகளும் இதில் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன.

விலை விபரம்

இந்த காரில் பாதுகாப்பிற்குப் பெயர் போன ஸ்கோடா நிறுவனம்ஸ் டாண்டர்டாக 10 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா சிஸ்டம், மேம்பட்ட ஆட்டோ பார்க் அசிஸ்ட், ஏஆர் (AR) அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் விபத்துகளைத் தவிர்க்க உதவும் அதிநவீன ஏடாஸ் (ADAS) தொழில்நுட்பங்களை முழுமையாகப் புகுத்தியுள்ளது.

இக்காரின் அதிகாரப்பூர்வ இந்திய விலை விபரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தியச் சந்தையில் இதன் ஆரம்ப விலை தோராயமாக 65 லட்சம் ரூபாய் (Ex-showroom) என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிமுகமாகும் பட்சத்தில், இது இந்தியாவில் தற்பொழுது இருக்கும் பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான கியா இவி9 (Kia EV9) மாடலுக்கு மிகச்சிறந்த மாற்றாக அமையும்.

ஒரே முறை சார்ஜ் செய்தால் 647 கி.மீ போகலாம்! ஸ்கோடாவின் புதிய 7-சீட்டர் எலக்ட்ரிக் SUV 'PEAQ'!