ஷாக்!! மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு.!
நீண்டகால யோசனை மற்றும் கட்ட பரிசீலனைகளுக்கு பிறகு தனது மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவி, தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களது உறவில் கருத்து வேறுபாடு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது. முன்னதாக, ஆர்த்தி ஜெயம் ரவியுடன் இருந்த அனைத்து புகைப்பங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து கொண்டதாக ஒரு கிசுகிசுப்புகள் இருந்து வந்தன. இந்த நிலையில், தனது மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இது தமிழ் திரையுலகிலும், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது பதிவில், நீண்டகால யோசனை மற்றும் கட்ட பரிசீலனைகளுக்கு பிறகு மனைவி ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயம் ரவி தனது விவாகரத்து அறிக்கையில், ” வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும். திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.