வடகிழக்கு பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் எப்போது தொடங்கும்?
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக, நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேலும் வலுவடைந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறக்கூடும். வருகின்ற 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இந்நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் என்பதால், வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் தாமதம் ஏற்படுகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் அடுத்து இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று மீனவர்கள் கடலில் அந்த பகுதிகளில் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.