வானிலை அப்டேட் : தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்!

தமிழ்நாடு & புதுச்சேரியில் அடுத்த 2 வாரங்களுக்கு கோடை வெப்பம் தீவிரமடையும். பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 2-3°C அதிகமாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கோடை வெப்பம் தீவிரமடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். வெப்பக்காற்று மற்றும் வறண்ட வானிலை தொடர்ந்து நிலவுவதால், நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்ப அழுத்தம் (Heat Stress) ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு வார காலத்திலும், குறிப்பாக பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வெப்ப அழுத்தம் ஏற்படும் போது உடல் சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், அதிக வியர்வை மற்றும் நீரிழப்பு போன்ற அறிகுறிகள் தென்படலாம். எனவே, போதிய அளவு தண்ணீர் அருந்துதல், நிழலில் தங்குதல், இலேசான உடைகள் அணிதல் மற்றும் நேரடி சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஹேமச்சந்தர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் இயல்பாகவே வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு வெப்பநிலை இன்னும் சற்று அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.வானிலை மையங்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர். மக்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.