40 மாடி இரட்டை கோபுரத்தை இடிக்க உத்தரவு – காரணம் தெரியுமா..?

The Supreme Court has ordered the demolition of an illegally constructed 40-storey twin tower building in Noida near Delhi within three months.

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுர கட்டிடத்தை மூன்று மாதத்திற்குள் இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் நிறுவனம் 40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடத்தைக் கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தை 550 குடியிருப்புகள் கொண்ட 16 மாடி கட்டிடமாக  கட்ட உள்ளதாக 2005 ஆம் ஆண்டு இந்நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், தற்பொழுது விதிகளை மீறி அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுக்குமாடி எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி, தற்போது 900-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட 40 மாடி கட்டிடமாக உயர்த்தி உள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக இந்த கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள் 2014 ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டைக் கோபுர கட்டிடங்களை 4 மாதத்திற்குள் இடித்து அகற்ற வேண்டும் எனவும், வீடு வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது. எனவே, இந்த உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எம் ஆர் ஷா அமர்வு விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி 40 மாடி கொண்ட இரட்டை கோபுரத்தை மூன்று மாதத்துக்கு இடிக்க வேண்டும் எனவும், கோபுரத்தை இடிக்கக்கூடிய செலவை சூப்பர்டெக் நிறுவனமே ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த குடியிருப்பில் வசிக்கக்கூடிய உரிமையாளர்களுக்கு 12 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பித் தரவேண்டும் எனவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.