பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா சென்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்.
இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக தகராறு நிலவும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், சீன அரசு பிரதிநிதி யாங் ஜெய்சியை சந்தித்து, சிக்கிம் எல்லையில் உள்ள டோகாலாம் பகுதியில் ஏற்பட்டுள்ள தகராறு குறித்தும் தோவால் ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தொடர்பாக சிறப்பு திட்டத்தை உருவாக்கும் குழுக்களில், தோவாலும், யாங் ஜெய்சியும் உறுப்பினர்களாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சீன பயணத்தின்போது, அந்நாட்டு அதிபரை அஜித் தோவால் சந்திப்பாரா? இல்லையா? என்பது தெரியாமல் இருந்து வந்தது.இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் 5 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் சீன அதிபரை வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளனர். அப்போது ஜீ ஜின்பிங்கை அஜித் தோவாலும் சந்திக்கவுள்ளார் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.