திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பொதத்தூர் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவியும் தனியார் பள்ளி ஆசிரியை. மகள் ஐந்தவி(23) பி.டெக் பட்டதாரி. இவருக்கு வேலை கிடைத்து பணியில் சேர இருந்தார். ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள குளியலறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டு இருந்தது.இதுகுறித்து ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக நவீன்குமார் என்பவரை சந்தேகத்தின்பேரில் நேற்று பிடித்து விசாரித்தனர். அவர் ஐந்தவியை பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பொதத்தூர் டிஎஸ்பி அளித்தபேட்டி: ராஜபாளையம் தண்டுதூரு கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜெயபிரகாஷ் வீட்டில் வாடகைக்கு தங்கி படித்து வந்துள்ளார். பணப்பற்றாக்குறையால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
நெல்லூர் மாவட்டம், சூலூர்பேட்டையை சேர்ந்த நவீன்குமாரின் நண்பர் நரஹரி. இவர் அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது காதலியுடன் தனியாக இருப்பதற்காக அறை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி நவீன்குமார் தான் குடியிருந்த ஜெயபிரகாஷ் வீட்டின் அருகே உள்ள வீட்டிற்கு நரஹரி மற்றும் அவரது காதலியை அழைத்து சென்றுள்ளார். அப்போது, நரஹரியும் அவரது காதலியும் தனிமையில் இருப்பதற்காக நவீன்குமாரை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் அவர் கோபித்துக்கொண்டு வீட்டிற்கு பைக்கில் ெசன்றுள்ளார். சிறிது தூரம் சென்றபோது பெட்ரோல் தீர்ந்து பைக் பாதியில் நின்றுள்ளது.
இதற்கிடையே ஐந்தவி அந்த வழியாக தனது தந்தைக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது நவீன்குமார் பைக்கை தள்ளிக் கொண்டு வந்ததை பார்த்த ஐந்தவி, அவரிடம் ஏன் பைக்கை தள்ளிக்கொண்டு வருகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு நவீன்குமார் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக கூறினார். அதற்கு ஐந்தவி என்னை வீட்டில் விட்டுவிட்டு எனது ஸ்கூட்டியில் சென்று பெட்ரோல் வாங்கிக்கொள் என்று கூறியுள்ளார். அதன்படி அவரை வீட்டில் விட்டுவிட்டு பெட்ரோல் வாங்கிய நவீன்குமார், ஸ்கூட்டியின் சாவியை கொடுக்க வீட்டினுள் சென்றுள்ளார்.
அப்போது, ஐந்தவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த நவீன்குமார், ஐந்தவியை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை குளியலறைக்கு இழுத்துச் சென்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் அவரது ஸ்கூட்டி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்