டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் தூத்துக்குடி அணி, கோவை கிங்சை வீழ்த்தி 5–வது வெற்றியை பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றது.
நெல்லையில் நேற்றிரவு நடந்த 15–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், கோவை கிங்சும் மல்லுகட்டின.
டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த கோவை அணி தடுமாறியது. ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் (12.5 ஓவர்) தத்தளித்த கோவை அணிக்கு கடைசி கட்டத்தில் ஸ்ரீனிவாசனும், ஹரிஸ்குமாரும் புத்துயிர் கொடுத்தனர். இவர்களது தடாலடியான பேட்டிங் கோவை அணியை நிமிர வைத்தது. ஸ்ரீனிவாசன் 52 ரன்களும் (36 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹரிஷ்குமார் 33 ரன்களும் (16 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. தூத்துக்குடி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
unknown nodeஅடுத்து களம் இறங்கிய தூத்துக்குடி அணிக்கு வழக்கம் போல் வாஷிங்டன் சுந்தரும், கவுசிக் காந்தியும் வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். வாஷிங்டன் சுந்தர் 36 ரன்களும் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கவுசிக் காந்தி 44 ரன்களும் (32 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) திரட்டி வெற்றிப்பாதையை உருவாக்கி கொடுக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக் அவர்கள் விட்டுச்சென்ற பணியை அமர்க்களமாக செய்து முடித்தார்.
முடிவில் தூத்துக்குடி அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 47 ரன்களுடனும் (28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), நாதன் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 5 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கோவை அணிக்கு இது 2–வது தோல்வியாகும்.