உத்தரபிரதேசத்தில் 17 வயது சிறுமியை அவரது வீட்டு 2 ஆவது மாடியிலிருந்து 3 இளைஞர்கள் தூக்கி எறிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசம் மதுராவில் வசிக்கும் 17 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் திலீப், கவுசல், அவனிஷ் என்ற 3 இளைஞர்கள் சில மாத காலமாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த 3 வாலிபர்களும் அந்த சிறுமியின் வீட்டில் நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமியை 2 வது மாடியிலிருந்து தூக்கி எறிந்துள்ளனர். பலத்த காயமடைந்த அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.
இந்த சம்பவத்தால் அந்த 3 இளைஞர்கள் மீதும் அச்சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: எங்கள் வீட்டின் அருகே வசித்து வரும் 3 வாலிபர்கள் பாலியல் ரீதியில் சில மாதங்களாக எனது மகளை துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில், திங்கள் கிழமை இரவில் மூவரில் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு மகளிடம் பேச வேண்டும் என்று கூறினர். நான் பேச அனுமதிக்கவில்லை. அதற்கு என்னை தவறான வார்த்தைகளில் திட்டினர்.
பின்னர், இரவு 8 மணியளவில் மூவரும் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து மகளிடம் பாலியல் தொந்தரவு அளித்தனர். பின் மகளை அங்கிருந்து தூக்கி செல்ல முடிவு செய்தனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சத்தம் போட தொடங்கியதால் எனது மகளை 2-ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசி விட்டு அவ்விடத்தை விட்டு தப்பி சென்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு முதுகெலும்பில் பலத்த அடிபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது சிறுமி சுய நினைவோடு இருப்பதாகவும் மருத்துவமனையில் கூறியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைதாகியுள்ள நிலையில் ஒருவரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
unknown node