அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் பிறந்த தினம் இன்று…!
ஆதரவற்று இறக்கும் தருவாயிலிருக்கும் நோயாளிகளுக்கு தொண்டு செய்த அன்னை தெரசா அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.
1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபில் என்னுமிடத்தில் பிறந்தவர் தான் அன்னை தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதே ஆகும். இவர் 1950 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். அதன் பின்பு நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அனாதைகள் மற்றும் தொழு நோயாளிகள் என இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு இவர் தொண்டாற்றியுள்ளார்.
சிறந்த சமூக சேவகராக 1970 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் புகழப்பட்ட இவருக்கு, 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1980 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தனது 87வது வயதில் இவர் மறைந்தார். தனது வாழ்நாளை பிறருக்கு தொண்டு செய்வதற்காகவே அர்ப்பணித்து, எளிமையான வாழ்க்கை வாழ்ந்த அன்னை தெரசா அவர்களது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.