Womens World Cup 2025 : நிறைவேறுமா இந்தியா கனவு? இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!

நாளை மதியம் 3 மனிக்கு நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இந்தியா மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

IND-W vs SA-W

மும்பை :இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ICC மகளிர் ODI உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2005 மற்றும் 2017 ஆண்டுகளில் இறுதிக்கு தகுதி பெற்று தோல்வியடைந்த இந்திய அணி, இம்முறை புதிய சாம்பியனாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரையிறுதியில் ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவித்தது, ஆனால் இந்தியா 48.3 ஓவர்களில் 341/5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது மகளிர் ODI வரலாற்றில் அதிக இலக்கை விரட்டிய வெற்றியாக பதிவானது.

இந்தியாவின் இறுதி எதிராளியாக தென்னாப்பிரிக்கா உள்ளது, இது இரு அணிகளுக்கும் முதல் உலகக் கோப்பை இறுதி ஆகும்.இறுதிப் போட்டி நாளை (நவம்பர் 2, 2025) மதியம் 3 மணிக்கு நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.வை. பட்சில் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் தலைமையில், ஸ்மிருதி மந்தனா, ஷாஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், டீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்) ஆகியோர் முக்கிய வீராங்கனைகளாக இருப்பார்கள்.

அதே சமயம், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் தலைமையில், டாஸ்மின் பிரிட்ஸ், சூன் லூஸ், மாரிசான் காப், சைனலோ ஜஃப்டா (விக்கெட் கீப்பர்) ஆகியோர் களமிறங்குவார்கள்.

இந்தியாவின் எதிர்பார்த்த லெவென் : ஸ்மிருதி மந்தனா, ஷாஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மான்ப்ரீத் கவுர் (கேப்டன்), டீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், க்ராந்தி கௌட், ஸ்ரீ சாரணி, ரேனுகா தாகூர்.

தென்னாப்பிரிக்காவின் எதிர்பார்த்த லெவென் : லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சூன் லூஸ், அன்னெரி டெர்க்சன், அன்னெக் போஷ், மாரிசான் காப், சைனலோ ஜஃப்டா (விக்கெட் கீப்பர்), க்ளோய் ட்ரையோன், நாடீன் டி கிளெர்க், ஆயபோங்கா காகா, நான்குலுலெகோ ம்லாபா.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் டிவி வழியாக பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் வெப்சைட்டில் லைவ் ஸ்ட்ரீமிங் கிடைக்கும். இந்த போட்டி, இந்தியாவின் மூன்றாவது உலகக் கோப்பை இறுதியாகும், ஆனால் முதல் வெற்றிக்கான வாய்ப்பாக உள்ளது. ஸ்டேடியம், நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.வை. பட்சில் ஸ்போர்ட்ஸ் அகாடெமி, ரெட் சாய் பிட்ச் கொண்டது, இது இந்தியாவுக்கு சாதகமானது. போட்டி, இந்தியாவின் அணி ஒற்றுமை மற்றும் தென்னாப்பிரிக்காவின் வலிமையான பந்துவீச்சுக்கு இடையேயான போட்டியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.