ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கப் போறீங்களா? Yamaha R2 vs KTM RC 200... சரியான சாய்ஸ் எது?

200cc ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு Yamaha R2 மற்றும் KTM RC 200 முக்கிய தேர்வாக இருக்கும் நிலையில் இரண்டில் எது பெஸ்ட் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Hero Image

டெல்லி : இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் ஆக்ரோஷமான வடிவமைப்பு மற்றும் அதிவேக செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு எப்போதுமே இளைஞர்கள் மத்தியில் ஒரு தனி மிரட்டலான வரவேற்பு உண்டு. கடந்த பல ஆண்டுகளாக இந்த 200சிசி ரேசிங் பிரிவில் கேடிஎம் ஆர்சி 200 (KTM RC 200) பைக் ஒரு அசைக்க முடியாத சாம்பியனாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், யமஹா நிறுவனம் தனது புதிய யமஹா ஆர்2 (Yamaha YZF R2) பைக்கை ஆர்15 மாடலுக்கு மேல் ஒரு பவர்ஃபுல் ஆப்ஷனாகக் களமிறக்கி, கேடிஎம் நிறுவனத்திற்கு நேரடி சவால் விடுத்துள்ளது.

லிக்விட்-கூல்டு இன்ஜின், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ரேசிங் ஓட்டுதல் நிலை மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் என இரண்டுமே பேப்பரில் ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், இரண்டில் எது பெஸ்ட் என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. எனவே, இந்த பதிவில் இரண்டு வண்டிகளையும் ஒப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த பைக் பெஸ்ட் என்பதை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

வடிவமைப்பு

புதிய யமஹா ஆர்2 பைக்கைப் பார்த்த உடனே நம் கவனத்தை ஈர்ப்பது அதன் ஆர்-சீரிஸ் (R-Series) டிஎன்ஏ வடிவமைப்பு தான். யமஹா நிறுவனம் தனது பெரிய சூப்பர்பைக்குகளின் ஏரோடைனமிக் பேனல்கள் மற்றும் மஸ்குலர் எரிபொருள் தொட்டியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்2 மாடலை வடிவமைத்துள்ளது. இதன் பிரகாசமான எல்இடி விளக்குகள் மற்றும் கச்சிதமான உடல் அமைப்பு வண்டியை ஒரு பியூர் ரேசிங் பைக் போலக் காட்டுகிறது.

Yamaha R2 vs KTM RC 200.webp

மறுபுறம், கேடிஎம் ஆர்சி 200 பைக் தனக்கென ஒரு பிரத்யேக ஷார்ப்பான கோண வடிவமைப்பு (Angular Design) மற்றும் கண்ணைக் கவரும் ஆரஞ்சு நிற கிராபிக்ஸ் தோற்றத்தைக் கொண்டுள்ளது. கேடிஎம் எப்போதுமே ஒரு அக்ரஸிவ் ரேஸ் பைக் லுக்கிற்குப் பெயர் பெற்றது, அந்த வகையில் இதன் கூர்மையான தோற்றம் இளைஞர்களை உடனே கவரும் படி உள்ளது. யமஹா பார்க்க அதிக பிரீமியமாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறது, அதே சமயம் கேடிஎம் பார்க்க அதிக முரட்டுத்தனமாகவும் ரேஸ் ட்ராக் பைக் போலவும் காட்சியளிக்கிறது.

இன்ஜின் திறன்

இன்ஜின் ஆற்றலைப் பொறுத்தவரை இரண்டு பைக்குகளுமே சம பலத்துடன் மோதிக்கொள்கின்றன. புதிய யமஹா ஆர்2 பைக்கில் 204cc லிக்விட்-கூல்டு, டிஓஹெச்சி (DOHC), 4-வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 26.5 PS பவரையும் மற்றும் 19.1 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதற்கு நேர்மாறாக, கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் 199.5cc சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 25 PS பவரையும் மற்றும் 19.2 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.பேப்பரில் பார்க்கும்போது யமஹா சற்றே கூடுதல் குதிரைத்திறன் பவரையும், கேடிஎம் ஒரு புள்ளி கூடுதல் டார்க்கையும் கொண்டுள்ளது.

Yamaha R2 vs KTM RC 200 news.webp

ஆனால், இங்குதான் யமஹா ஒரு மிகப்பெரிய ட்ரிக்கைச் செய்துள்ளது. யமஹா ஆர்2 பைக்கின் ஒட்டுமொத்த எடை வெறும் 149 கிலோ மட்டுமே, ஆனால் கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் எடை 160 கிலோவாக உள்ளது. இந்த 11 கிலோ எடை வித்தியாசம் காரணமாக, யமஹா ஆர்2 பைக்கின் பவர்-டு-வெயிட் விகிதம் (Power-to-weight ratio) மிக அதிகமாக உள்ளது, இது வண்டியின் பிக்-அப் மற்றும் கையாளுதலை பல மடங்கு வேகமாக்குகிறது.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங்

ஹார்டுவேர் மற்றும் சஸ்பென்ஷன் என்று வந்துவிட்டால் கேடிஎம் ஆர்சி 200 பைக் மிகவும் காஸ்ட்லியான பாகங்களுடன் அசுர பலத்துடன் நிற்கிறது. இதில் முன்பக்கத்தில் பெரிய 43 மி.மீ அளவிலான டபிள்யூபி அபெக்ஸ் யுஎஸ்டி (WP APEX USD) ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் முன்பக்கம் 320 மி.மீ பெரிய டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 230 மி.மீ டிஸ்க் பிரேக்கும் ரேடியல் காலிப்பர்களுடன் பொருத்தப்பட்டு, டூயல்-சேனல் ஏபிஎஸ் பாதுகாப்புடன் வருகிறது. வளைவுகளில் பைக்கை அதிக வேகத்தில் வளைப்பதற்கும் (Cornering), அதிரடியாகப் பிரேக் பிடிப்பதற்கும் கேடிஎம் ஹார்டுவேர் மிகச் சிறந்த கிரிப்பைத் தரும்.

Yamaha R2 vs KTM RC 200 update.webp

மறுபுறம், யமஹா ஆர்2 பைக்கிலும் முன்பக்கம் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோகிராஸ் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்பக்கம் 282 மி.மீ டிஸ்க் மற்றும் பின்பக்கம் 220 மி.மீ டிஸ்க் பிரேக் டூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. அன்றாட நகர்ப்புற ஓட்டுதலுக்கு யமஹாவின் இந்த அமைப்பு மிகவும் போதுமானது என்றாலும், பியூர் ரேசிங் மற்றும் ட்ராக் பயன்பாடுகளுக்கு கேடிஎம்-மின் பெரிய டிஸ்க் பிரேக் மற்றும் டபிள்யூபி சஸ்பென்ஷன் கூடுதல் அட்வாண்டேஜாக அமைகிறது.

வளைவுகளில் திருப்புதல் (Cornering)

வளைவுகளில் வண்டியைத் சாய்ந்து திருப்புவது தான் இந்த வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் தனி அழகே ஆகும். கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் முன்பக்கம் 110/70 டயரும், பின்பக்கத்தில் மிகவும் அகலமான 150/60 டயரும் 17-இன்ச் அலாய் வீல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அகலமான டயர் சாலைகளில் ஒரு மிகப்பெரிய பிடிமானத்தைத் தரும்.

அதே நேரத்தில், யமஹா ஆர்2 பைக்கில் முன்பக்கம் 100/80 டயரும், பின்பக்கம் 140/70 டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. யமஹா பைக்கின் டயர் அகலம் சற்றே குறைவு என்றாலும், வண்டியின் எடை 11 கிலோ குறைவாக இருப்பதால், நெரிசலான டிராஃபிக் சாலைகளிலும், திருப்பங்களிலும் வண்டியை மிகவும் லேசாக, நினைத்த மாத்திரத்தில் சட்டென்று திசை மாற்றி ஓட்டுவது (Agility) யமஹாவில் மிக எளிதாக இருக்கும்.

நவீன தொழில்நுட்ப வசதிகள்

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, புதிய யமஹா ஆர்2 பைக் மிகவும் மாடர்னாகக் காட்சியளிக்கிறது. இதில் 5-இன்ச் முழு டிஎஃப்டி (TFT) டிஸ்ப்ளே, ஒய்-கனெக்ட் ஸ்மார்ட்போன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் மூன்று பிரத்யேக ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதன் டாப் வேரியண்ட்களில் கியரை வேகமாக மாற்ற உதவும் குயிக் ஷிப்டர் வசதியும் உள்ளது.

Yamaha YZF R2-1.webp

மறுபுறம், கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் பயனுள்ள தகவல்களைத் தரும் ஒரு எளிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் யமஹா அளவுக்கு அட்வான்ஸ்டு ரைடிங் மோடுகளோ அல்லது ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதிகளோ பெரிய அளவில் இல்லை என்பது இதன் சிறிய பின்னடைவாகும்.

நீங்கள் எந்த பைக்கை வாங்கலாம்?

சுருக்கமாகச் சொன்னால், இந்த இரண்டு பைக்குகளுமே தங்களின் சொந்தப் பிரிவில் மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகின்றன. ஒருவேளை உங்களுக்கு யமஹாவின் புகழ்பெற்ற ஆர்-சீரிஸ் சூப்பர்பைக் போன்ற பிரீமியம் தோற்றமும், 149 கிலோ குறைந்த எடையில் கையாளுவதற்கு மிகவும் லேசான ஒரு பைக் வேண்டும் என்றாலும், டிஎஃப்டி டிஸ்ப்ளே, ரைடிங் மோடுகள் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை நீங்கள் விரும்பினால் நீங்கள் யமஹா R2 பைக்கைத் தேர்வு செய்யலாம்.

ஒருவேளை உங்களுக்கு ஆக்ரோஷமான ரேசிங் தோற்றம், பெரிய டபிள்யூபி சஸ்பென்ஷன் மற்றும் அதிக கிரிப் தரும் அகலமான டயர்கள் கொண்ட ஒரு பக்கா ட்ராக்-ஃபோகஸ்டு பைக் வேண்டும் என்றால்.அதிவேகத்தில் செல்லும் போது சிறந்த பிரேக்கிங் பவர் மற்றும் வளைவுகளில் அதிக ஸ்டெபிலிட்டி இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கேடிஎம் RC 200 பைக்கைத் தேர்வு செய்யலாம்.

ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கப் போறீங்களா? Yamaha R2 vs KTM RC 200... சரியான சாய்ஸ் எது?