சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி...நிக் நேம் வைத்த கிறிஸ் கெய்ல்!

ஒருநாள் என்னுடைய அதிவேக சதம் சாதனையையும் நீ முறியடிப்பாய் என கெய்ல் வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Hero Image

ராஜஸ்தான் : ஐபிஎல் தொடரில் இந்த சீசனின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ள இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது கிறிஸ் கெய்லின் பல ஆண்டுகால சாதனையையே முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். வெறும் 15 வயதிலேயே ராஜஸ்தான் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் அவர், இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கைப்பற்றியுள்ளார்.

2012ஆம் ஆண்டு கிறிஸ் கெய்ல் ஒரு சீசனில் 59 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். அதன் பிறகு ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்ட பல அதிரடி வீரர்கள் முயன்றும் அந்த சாதனையை தாண்ட முடியவில்லை. ஆனால் இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்திய வைபவ் சூர்யவன்ஷி, சிக்ஸர்களை மழையாக பறக்கவிட்டு அந்த சாதனையை உடைத்துள்ளார்.

குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வெளியேற்ற சுற்று போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது. அதற்கு பதிலளித்த ஹைதராபாத் அணி 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அந்த போட்டியில் அதிரடி ஆட்டம் காட்டிய வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த சாதனையை தொடர்ந்து கிறிஸ் கெய்ல் தனது சமூக வலைதளத்தில் “சிக்ஸ் மிஷின்” என வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார்.

மேலும், “ஒருநாள் என்னுடைய அதிவேக சதம் சாதனையையும் நீ முறியடிப்பாய்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். கெய்ல் 2013ஆம் ஆண்டு வெறும் 30 பந்துகளில் சதம் அடித்து இன்னும் அந்த சாதனையை தக்க வைத்திருக்கிறார்.

இந்த சீசனில் சூர்யவன்ஷி விளையாடிய விதத்தை பார்த்த ரசிகர்கள், அந்த சாதனையும் விரைவில் உடையும் என எதிர்பார்த்து வருகின்றனர். சமீபத்திய போட்டியிலும் அவர் வேகமாக ரன்கள் குவித்ததால் புதிய சாதனை உறுதி என ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் திடீரென ஆட்டமிழந்து வெளியேறியதால், அந்த இமாலய சாதனையை நூலிழையில் தவறவிட்டார். இருந்தாலும் அவரது அதிரடி ஆட்டம் இந்த ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய சிறப்பம்சமாக மாறியுள்ளது.