TNPL 2026: சேப்பாக்கை வீழ்த்தி திருச்சி அபார வெற்றி! சஞ்சய் யாதவ் மிரட்டல்

டிஎன்பிஎல் 26வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றி பெற்றது.

TNPL TRICHY

சென்னை:டிஎன்பிஎல் (TNPL) தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 26வது லீக் போட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது. விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாத இந்தப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவு வரை நீடித்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைக் குவித்தது.

சஞ்சய் யாதவ் சரவெடி

திருச்சி அணியின் இந்த இமாலய ஸ்கோருக்கு முக்கியக் காரணம் சஞ்சய் யாதவ் தான். களமிறங்கியது முதலே பவுண்டரிகளாக விளாசிய அவர், வெறும் 40 பந்துகளில் 54 ரன்களைக் குவித்துச் சரவெடியாக வெடித்தார்.

பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் மிரட்டிய அவர், 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சேப்பாக் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கே. ஆஷிக்கின் (75 ரன்கள்) அதிமுக்கிய விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த அசத்தலான ஆல்-ரவுண்டர் ஆட்டத்திற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இறுதிவரை போராடியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் ஆதிக்கம்

முன்னதாக, நேற்று மதியம் இதே மைதானத்தில் நடந்த 25வது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோவை அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பிய கேப்டன் ஷாருக்கான் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

TNPL 2026: சேப்பாக்கை வீழ்த்தி திருச்சி அபார வெற்றி! சஞ்சய் யாதவ் மிரட்டல்