ஜெய்ப்பூர் :ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டனும் முன்னணி வீரருமான சஞ்சு சாம்சன், 2026 ஐபிஎல் (IPL) சீசனுக்கு முன் அணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் அல்லது வேறு அணிக்கு மாற்றப்பட வேண்டும் என்று முறையாக கோரிக்கை விடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் 18 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்ட சாம்சன், 2013 முதல் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராகவும், 2021 முதல் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
149 போட்டிகளில் 4,000-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து, அணியின் அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர். 2025 ஐபிஎல் சீசன் ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றமளித்தது, 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாம் இடத்தை பிடித்தது. சாம்சன், கை விரல் காயம் மற்றும் வயிற்று தசைப்பிடிப்பு காரணமாக 5 போட்டிகளில் விளையாட முடியாமல் போனார்.
இந்த சீசனில் 9 போட்டிகளில் 285 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், ஒரு அரைசதத்துடன் 140.39 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். இந்த ஏமாற்றமான செயல்பாடு மற்றும் அணி மேலாண்மையுடனான கருத்து வேறுபாடுகள் அவரை விடுவிக்க கோர வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டத்தால், சாம்சன் மூன்றாவது இடத்திற்கு மாற்றப்பட்டது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக Cricbuzz அறிக்கை தெரிவிக்கிறது.
சாம்சன் இந்திய டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரராக நிலையான இடம் பெற வேண்டும் என்ற விருப்பமும் இந்த முடிவுக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள், அவரது உறவு அணியுடன் முன்பு போல் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், பயிற்சியாளர் ராகுல் டிராவிடுடனான கருத்து வேறுபாடு குறித்த வதந்திகளும் பரவின, ஆனால் டிராவிட் இதை “ஆதாரமற்றது” என்று மறுத்து, சாம்சனுடன் நல்ல உறவு இருப்பதாக கூறினார்.
இந்நிலையில், சாம்சன் புதிய தொடக்கத்தை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், சாம்சனை வர்த்தகம் செய்ய பல அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) சாம்சனை பெற ஆர்வம் காட்டினாலும், 18 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வர்த்தகத்திற்கு பெரிய வீரர்களை விடுவிக்க வேண்டிய நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கோல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) உள்ளிட்ட பிற அணிகளும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேற விரும்புவதாக வெளியான தகவலை தொடர்ந்து ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சென்னை அணி நிர்வாகம் பின்தொடர்ந்துள்ளது. எனவே, இதனை பார்த்த ரசிகர்கள் இந்த தகவல்கள் உண்மையா? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
