டெல்லி :இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கேள்வியாக உள்ளது. 38 வயதான ரோஹித், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பையில் இந்தியாவை இறுதிப்போட்டி வரை வழிநடத்திய அவர், தோல்வியடைந்ததால், 2027 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு அவருக்கு உள்ளது.
ஆனால், 2027-ல் அவருக்கு 40 வயதாக இருக்கும் என்பதால், உடற்தகுதி மற்றும் ஃபார்ம் ஆகியவை அவரது பங்கேற்பை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும். முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் சவுரவ் கங்குலி, வயது மற்றும் குறைவான ஒருநாள் போட்டிகள் காரணமாக ரோஹித்தின் 2027 பயணம் கடினமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இருப்பினும், கலீல் அகமது போன்றவர்கள் ரோஹித் மேலும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, ரோஹித் சர்மாவின் தலைமைத்துவம் மற்றும் ஊக்கமளிக்கும் பண்புகளைப் பற்றி RevSportz-க்கு அளித்த பேட்டியில் பகிர்ந்தார். இது குறித்து பேசிய அவர் “2018-19 ஆசியக் கோப்பையில் ரோஹித்தின் கேப்டன்ஷியில் விளையாடியபோது, நான் இளம் வீரராக இருந்தேன். அவர் எனக்கு நம்பிக்கை அளித்தார், நான் சிறப்பானவன் என்று உணரவைத்தார். அந்த வயதில், எனது திறன்களை நான் முழுமையாக உணரவில்லை. அவரைப் போன்ற வெற்றிகரமான வீரர் என்னுடன் பேசி, ஊக்கப்படுத்தியது என் நம்பிக்கையை உயர்த்தியது,” என்று கலீல் கூறினார்.
2019-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய பிறகு, காயங்கள் காரணமாக இரண்டு ஆண்டுகள் விளையாட முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து 2019-ல் ராஜ்கோட்டில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான தொடரில், கலீல் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து மோசமாக விளையாடிய ஒரு போட்டியைப் பற்றி பகிர்ந்த அவர் “அந்தப் போட்டியில் நான் சரியாக விளையாடவில்லை. ஆனால், ரோஹித் பையா அணி ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய பிறகும் தங்கி, என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசினார்.
‘நீ உன் திறன்களை உணரவில்லை. ஸ்டேடியத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்கள் என் பெயரை கத்துகிறார்கள். இதேபோல் உன் பெயரையும் கத்த வேண்டும் என்று நீ விரும்ப வேண்டும், எப்போதும் நேர்மறையாக இரு,’ என்று அவர் கூறினார். இது எனக்கு பெரிய உத்வேகமாக இருந்தது,” என்று கலீல் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
“ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது செய்ய மேலும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்,” என்று கலீல் தெரிவித்தார். ரோஹித்தின் தலைமையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்றது, ஆனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் தோல்வியடைந்தது அவருக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
