டெல்லி : குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய போட்டியில், அணியின் கேப்டன் கில் எடுத்த ஒரு முடிவை முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார். அருண் ஜைட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் கில், அனுபவமற்ற பந்துவீச்சாளர் அஷோக் சர்மாவை கொண்டு வந்தார். அந்த ஓவரில் KL ராகுல் மற்றும் நிஸ்ஸங்கா இணைந்து 23 ரன்கள் எடுத்தனர்.
இர்பான் பதான் தனது யூடியூப் சேனலில் பேசுகையில்,“பவர் ப்ளேயில் ரஷித் கானை பந்து வீச அனுப்பியது நல்ல முடிவு. ஆனால் கடைசி ஓவருக்கு அஷோக் சர்மாவை கொண்டு வந்தது பெரிய தவறு என்று நான் நினைக்கிறேன். KL ராகுல் மற்றும் பத்தும் நிஸ்ஸங்கா இருவரும் பேஸ் பந்துகளை விரும்பி அடிப்பவர்கள். அஷோக் பேஸ் கொடுக்கிறார், ஆனால் அந்த பிட்ச் அதற்கு ஏற்றதாக இல்லை. ப்ளாக் சாயில் பிட்ச்சில் பவர் ப்ளேயின் கடைசி ஓவரை அனுபவமற்ற பந்துவீச்சாளரிடம் கொடுப்பது தவறு” என்றார்.
இருப்பினும், இந்தத் தவறு குஜராத் அணியின் வெற்றியை பாதிக்கவில்லை. 211 ரன்கள் இலக்கை நோக்கி சென்ற டெல்லி அணியை, இறுதி ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா திறமையாக கட்டுப்படுத்தினார். கடைசி ஓவரில் 12 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தார். ரஷித் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் பந்துவீச்சை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
ரஷித் கானின் பந்துவீச்சை பாராட்டிய இர்பான் பதான், “குஜராத் அணிக்கு மிகப் பெரிய பலம் ரஷித் கான். அவரது லெக் ஸ்பின் நிறைய திரும்பியது. முதல் ஓவரிலேயே அதிக ஸ்பின் கிடைத்தது. அப்படி ஸ்பின் கிடைக்கும்போது அவரது கூக்லி இன்னும் ஆபத்தானதாக மாறுகிறது” என்று கூறினார்.
மேலும்,ரஷித் கான் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அவர், 7.08 என்ற சிறப்பான economy-யை பராமரித்து வருகிறார்.குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் தனது கணக்கைத் திறந்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
