குஜராத் : டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்ஸ்மேன் ராஜத் படிதாரை ஆட்டமிழக்கச் செய்த அற்புதமான கேட்சைப் பிடித்த ஜேசன் ஹோல்டர், அந்தக் கேட்சை எப்படி பிடித்தார் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 42வது லீக் போட்டியில், ராஜத் படிதாரை ஆட்டமிழக்கச் செய்த ஹோல்டரின் கேட்ச் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில், அவரே இதுபற்றி பதில் அளித்தார்.போட்டிக்குப் பிறகு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய ஹோல்டர் கூறியதாவது:“பந்து என் கண்ணில் நன்றாகத் தெரிந்தது. ஆனால் எனக்கு முக்கியமாக இருந்தது, அந்தப் பந்து தரையில் விழுந்துவிடக் கூடாது என்பதுதான். அதனால்தான் முழு மனதுடன் அதற்காகப் பாய்ந்தேன்.காகிசோ ரபாடா என்னுடன் பந்தைப் பிடிக்க ஓடி வந்துகொண்டிருந்தார்.
நான் அவரைப் பார்த்தேன். ஆனால் அவர் எனக்கு போதுமான தூரத்தில் இருப்பதாக நினைத்து, நான் முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்தேன். என் முக்கிய நோக்கம் பந்தை அடைந்து, அதைப் பிடித்து வைப்பதுதான்.”ஹோல்டர் இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று கேட்சுகளைப் பிடித்தார். ராஜத் படிதார், டிம் டேவிட், குருனால் பாண்டியா ஆகியோரை அவர் பிடித்த கேட்சுகள் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார்.
மேலும் தன் 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, ஜிதேஷ் சர்மா மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.பேட்டிங்கிலும் தன் ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்திய ஹோல்டர், போட்டி சமநிலையில் இருந்தபோது இறுதிக் கட்டத்தில் 12 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஹோல்டரின் இந்த அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
