துபாய் :ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றில், செப்டம்பர் 23, 2025 அன்று துபாயில் நடந்த இலங்கைக்கு எதிரான வாழ்வா-சாவா ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான், 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக எட்டியது. இந்த வெற்றி, பாகிஸ்தானை சூப்பர் 4-இல் 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றியது.
புள்ளி விவர பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் வெற்றியில் ஆல்-ரவுண்டர் ஹுசைன் தலாத் முக்கிய பங்காற்றினார் என்றே கூறலாம். ஏனென்றால், அவர் தனது பந்துவீச்சில், 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, இலங்கை கேப்டன் சரித் அசலங்கா மற்றும் தசுன் ஷனகாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பேட்டிங்கில், 32 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த ஆட்டத்தில், பாகிஸ்தானின் பந்துவீச்சு ஒழுங்கமைக்கப்பட்டு, இலங்கையை குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்தியது, பேட்டிங்கில் பொறுப்பான ஆட்டம் வெற்றியை உறுதி செய்தது.போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹுசைன் தலாத், பாகிஸ்தான் அணியின் தயாரிப்பு மற்றும் உறுதியை வெளிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர் “நாங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறோம். வங்கதேச சுற்றுப்பயணம் உட்பட, எங்கள் வீரர்கள் அனுபவம் பெற்றுள்ளனர். இது எங்களுக்கு பெரிய பலமாக இருந்தது. முன்பு ஃபார்மில் இல்லாத வீரர்கள் இப்போது மீண்டு வந்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து பேசுகையில் இனி இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன, அவற்றில் சிறப்பாக ஆடினால் ஆசிய கோப்பை எங்களுடையதாக இருக்கும்,” என்று நம்பிக்கையுடன் கூறினார். “இந்தியாவுக்கு எதிராக தோற்றாலும், எங்களுக்கு அழுத்தம் இல்லை. நாங்கள் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் வெற்றி பெற விரும்பினோம்.
இந்தப் போட்டியில் எங்கள் முழு திறமையையும் காட்டினோம். விமர்சனங்களை புறந்தள்ளி, வெற்றிக்காக மட்டுமே கவனம் செலுத்தினோம்,” என்று கூறினார். மேலும், செப்டம்பர் 25, 2025 அன்று துபாயில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த வெற்றி, கோப்பையை வெல்லும் அவர்களின் நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
