விராட் கோலி விக்கெட்டை எடுத்தால் காலில் விழுந்திடுவேன்-விஷால் நிஷாத் ஓபன் டாக்!

ஆரம்பத்தில் நான் டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடினேன் விஷால் நிஷாத் தெரிவித்துள்ளார்.

Virat Kohli Vishal Nishad

டெல்லி :பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய வீரர் விஷால் நிஷாத், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தனது ஐடலாகக் கொண்டுள்ளார். கோலியின் ஆளுமை, ஆர்வம், வெற்றி மீதான தாகம் ஆகியவை தன்னை கிரிக்கெட் விளையாடத் தூண்டியதாக அவர் தெரிவித்தார். “விராட் கோலி எனது ஐடல். அவரது அணுகுமுறையும், டிரைவும் என்னை மிகவும் ஈர்க்கிறது. அவர் எனக்கு மிகவும் பிடித்தவர்” என்று விஷால் நிஷாத் கூறினார்.

ஐபிஎல் போட்டிகளில் கோலியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அவரது விக்கெட்டை வீழ்த்தினால் எப்படி கொண்டாடுவீர்கள் என்ற கேள்விக்கு விஷால் அளித்த பதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “அவரது விக்கெட்டை வீழ்த்தினால் நான் அவரது கால்களைத் தொட்டு வணங்குவேன், ஏனெனில் அவர் எனது ஐடல்” என்று அவர் பணிவுடன் கூறினார்.

இந்த பதில் அவரது லட்சியத்துடன் கூடிய பணிவான மனநிலையை வெளிப்படுத்துகிறது.விஷால் நிஷாத் உத்தரப் பிரதேசத்தில் உள்ள உள்ளூர் டி20 லீக்கில் இருந்து வந்து பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். அவரது பயணம் கடின உழைப்பு, குடும்பத்தின் தியாகம், தொடர் முயற்சி ஆகியவற்றால் நிரம்பியது. “கடினமான நாட்கள் இருந்தன. என் தந்தையுடன் சென்று வேலை செய்தேன். கிரிக்கெட்டை விட்டுவிட்டு வேறு ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்று என் தாயார் கூறினார். ஆனால் நான் விடாமல் இருந்தேன். ‘அம்மா, நான் நிச்சயம் செய்வேன்’ என்று சொன்னேன்.

என் உறுதியை கண்ட பிறகு குடும்பம் என்னை ஆதரித்தது” என்று அவர் நினைவுகூர்ந்தார்.முதலில் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடிய விஷால், ஒரு நண்பரின் ஆலோசனையால் லெதர் பால் கிரிக்கெட்டுக்கு மாறினார். “நண்பர் என் பந்து வீச்சை பார்த்து லெதர் பால் முயற்சி செய்ய சொன்னார். அதன் பிறகு தீவிரமாக பயிற்சி செய்தேன். என் பயிற்சியாளர் மூன்று ஆண்டுகள் கட்டணம் வாங்காமல் பயிற்சி அளித்தார்.

உத்தரப் பிரதேச உள்ளூர் டி20 டூர்னமென்ட்டில் நன்றாக ஆடிய பிறகு, இரண்டு ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்தேன்” என்று அவர் தனது பயணத்தை விவரித்தார்.விஷால் நிஷாத் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் பெற்ற ஸ்பின் திறமையை லெதர் பாலுக்கு ஏற்றவாறு மாற்றியதால் பவுலராக மாறியதாகக் கூறினார். “டென்னிஸ் பாலில் பயிற்சி செய்ததால் ஸ்பின் கொடுப்பதற்கு பழக்கப்பட்டேன். அதை லெதர் பாலுக்கு ஏற்றவாறு மாற்றியது என்னை பவுலராக மாற்றியது” என்று அவர் விளக்கினார். இப்போது ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அவரது பயணம், உழைப்பு மற்றும் உறுதியின் வெற்றிக் கதையாக அமைந்துள்ளது.