ரோஹித் மாதிரி ஆடணும்...நியூசிலாந்தை வெளுத்துவிட்ட அபிஷேக் சர்மா அதிரடி ஸ்பீச்!

ரோஹித் ஷர்மாவை பின்பற்றி தான் நான் விளையாடி வருகிறேன் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

abhishek sharma and rohit sharma

நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி அசத்தினார். அவர் வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் அபிஷேக் சர்மா 25 அல்லது அதற்கும் குறைவான டி20 போட்டிகளில் 8 அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக பில் சால்ட், சூர்யகுமார் யாதவ், அபில் லூயிஸ் ஆகியோர் தலா 7 அரைசதங்களுடன் இருந்தனர். மேலும், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்களில் மிகக் குறைந்த பந்துகளில் (22 பந்துகள்) அரைசதம் அடித்த சாதனையையும் அபிஷேக் பெற்றார்.

இதற்கு முன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் 23 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தனர். அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் விரைவாக ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து அணி 190 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு ஓபன் டாக் அளித்த அபிஷேக் சர்மா, “ரோஹித் சர்மா சார் இந்திய அணிக்காக அதிக பங்களிப்பை கொடுத்துள்ளார். அவரைப் போல விளையாட வேண்டும் என பயிற்சியாளர்களும், கேப்டனும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அவரைத்தான் நான் பின்பற்றுகிறேன் என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார். ரோஹித் சர்மாவை ரோல் மாடலாகக் கொண்டு ஆடுவதாகவும், அவரது அதிரடி ஆட்டத்தைப் பின்பற்றுவதாகவும் அபிஷேக் தெரிவித்தார்.

இந்த அதிரடி ஆட்டம் மற்றும் பேட்டி மூலம் அபிஷேக் சர்மா இந்திய டி20 அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அவரது பேட்டிங் ஸ்டைல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த போட்டிகளில் அவரது ஆட்டம் இந்தியாவுக்கு மேலும் வெற்றிகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.