எகிறிய மவுசு...விளம்பரத்திற்கு சூர்யவன்ஷி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி தற்போது Orange Cap பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Hero Image

ராஜஸ்தான்: ஐபிஎல் 2026 தொடரில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது கோடிக்கணக்கில் விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் மைதானத்தில் காட்டிய அதிரடியான ஆட்டம் காரணமாக, பல பெரிய நிறுவனங்கள் அவரை தங்களது விளம்பர முகமாக மாற்ற ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 680 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரராக உருவெடுத்துள்ளார். அதுவும் 240-ஐ தாண்டிய அதிரடி ரன் வேகத்தில் விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். 15 வயதிலேயே உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை சிக்ஸர், பவுண்டரிகளால் திணறடித்த அவரது ஆட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் காரணமாக தற்போது அவருக்கு பேட் விளம்பர ஒப்பந்தத்திற்காக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வரை வழங்க சில முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது தற்போதைய ஒப்பந்தம் முடிவடைய உள்ளதால், பல நிறுவனங்கள் அவரை தங்களது நிறுவனத்துடன் இணைக்க போட்டி போட்டு வருகின்றன.

சில நிறுவனங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஒரு நிறுவனம் எந்த தொகை வேண்டுமானாலும் குறிப்பிடலாம் என்ற வகையில் பணம் வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

15 வயதிலேயே இவ்வளவு பெரிய தொகைக்கு விளம்பர ஒப்பந்தம் கிடைக்கும் நிலைக்கு உயர்ந்திருப்பது, வைபவ் சூர்யவன்ஷியின் அபார திறமைக்கும், அவர் பெற்றிருக்கும் மக்கள் ஆதரவிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக அவர் உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.