இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரெல், அதனை தனது வழக்கமான இராணுவ சல்யூட் (Army Salute) மூலம் கொண்டாடினார். கார்ஜில் போரில் நாட்டுக்காகப் போராடிய தனது தந்தை நேம் சிங் ஜுரெலுக்கு (Nem Singh Jurel) மரியாதை செலுத்தும் விதமாகவே அவர் எப்போதும் இவ்வாறு கொண்டாடுகிறார்.
துருவ் ஜுரெல் 115* ரன்கள் எடுத்து தனது மைல்கல்லை எட்டிய அந்த உணர்ச்சிகரமான தருணத்தில், ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று அவருக்குப் பாராட்டு தெரிவித்தது. இந்த நெகிழ்ச்சியான கொண்டாட்டம் தற்போதைய சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இராணுவ தந்தையின் நெகிழ்ச்சியான எதிர்வினை
துருவ் ஜுரெலின் தந்தை நேம் சிங் ஜுரெல், இந்திய இராணுவத்தில் பணியாற்றி நாட்டிற்காகப் பல தியாகங்களைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் மைதானத்தில் சல்யூட் அடித்து சதத்தைக் கொண்டாடியதைக் கண்டு அவர் மிகுந்த நெகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது மகன் இந்திய அணியிக்காக அறிமுகமான போதே அவரது சல்யூட் கொண்டாட்டத்தைக் கண்டு தான் கண்ணீர் சிந்தியதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மகன் அடித்துள்ள முதல் சதம், தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்று அவர் நெகிழ்ந்துள்ளார்.
போராடி வென்ற துருவ் ஜுரெல்
இராணுவக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ஜுரெல், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆரம்ப காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தார். அவரது தந்தை ஒரு சாதாரண ஓய்வூதியதாரராக இருந்ததால், ஜுரெலின் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்கே அவரது தாய் தனது நகைகளை விற்க வேண்டியிருந்தது.
அனைத்துத் தடைகளையும் தாண்டி இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவின் நட்சத்திரமாக ஜுரெல் உருவெடுத்துள்ளது அவரது குடும்பத்தின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தந்தை கற்றுக்கொடுத்த ஒழுக்கமும், தாயின் தியாகமுமே தன்னை இந்த உயரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக ஜுரெல் எப்போதும் பெருமையுடன் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
